"`ஜவான்' படம் `பேரரசு' படத்தின் காப்பியா?"- அட்லிக்கு எதிராகப் புகார் அளித்த பிரபல தயாரிப்பாளர்!

இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன்’, ‘நண்பன்’ ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அட்லி, 2013-ம் ஆண்டு ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குநராகத் திரை உலகுக்கு அறிமுகமானார். 

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா, சத்யராஜ், சந்தானம், சத்யன் என்று முதல் படத்திலேயே பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்துப் படத்தை இயக்கிய இவருக்கு விமர்சகர்களிடமும் மக்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து விஜய்யை வைத்து ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ ஆகிய படங்களை இயக்கிய அட்லி, தற்போது இந்தியில் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.

‘ஜவான்’ படத்தில் ஷாருக் கான், நயன்தாரா, பிரியாமணி எனப் பல முன்னணி இந்திய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தினை தயாரிப்பாளர் கௌரி கான் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். அடுத்த வருடம் ஜூன் மாதம் இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அட்லி மீது தயாரிப்பாளர் ஒருவர் குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். 

அட்லி

இப்படம் விஜயகாந்த் நடிப்பில் வெளியான ‘பேரரசு’ படத்தின் கதையைத் தழுவி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன், அட்லிக்கு எதிராகத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் (TFPC) புகார் அளித்துள்ளார்.

“‘ஜவான்’ படம் ‘பேரரசு’ படத்தின் கதை என்று வெளியாகி உள்ள தகவல் குறித்து தயாரிப்பாளர் சங்கம் விசாரிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். ஏறக்குறைய அட்லியின் அனைத்து படங்களும் இதே போன்ற சிக்கல்களை சமூக வலைதளத்தில் எதிர்கொண்டுள்ளன. ‘ராஜா ராணி’ படம் ‘மௌனராகம்’ போன்றும், ‘தெறி’ படம் ‘சத்ரியன்’ போன்றும், ‘மெர்சல்’ படம் ‘மூன்று முகம்’, ‘அபூர்வ சகோதரர்கள்’ போன்றும் இருந்ததாக அனைவரும் விமர்சித்து வந்த நிலையில் தற்போது ‘ஜவான்’ படமும் இப்படி விமர்சனத்திற்குள்ளாகி இருக்கிறது. இது குறித்து அட்லி மற்றும் ‘ஜவான்’ படத்தின் தயாரிப்புத் தரப்பில் அதிகாரபூர்வ பதில் எதுவும் கொடுக்கப்படவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.