நிலச்சரிவால் புதைந்த மூணாறு எஸ்டேட்டில் நெகிழ்ச்சி கண் மூடிய பெற்றோரின் கனவை நிறைவேற்றிய செல்ல மகள்: விடாமுயற்சியுடன் படித்து எம்பிபிஎஸ் சேர்ந்தார்

மூணாறு: மூணாறு பெட்டிமுடி எஸ்டேட் நிலச்சரிவு பேரிடர் விபத்தில் அனைத்து உறவுகளையும் இழந்த மாணவி, விடாமுயற்சியினாலும், கடின உழைப்பினாலும் நீட்  தேர்வில் தேர்ச்சி பெற்று பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துள்ளார்.கடந்த 2020ம் ஆண்டு, ஆகஸ்ட் 6. கொரோனாவிற்கு குலைநடுங்கி உலகமே தனிமையில் உறைந்திருந்த நேரம் அது. மூணாறு பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் பகல் முழுவதும் வேலையை முடித்துவிட்டு, மலைகள் சூழ, நடுவில் இருந்த சிறிய குடியிருப்புகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர்.

கேரளாவை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்த தென்மேற்கு பருவமழை அன்று மூணாறையும் மிரட்டிக் கொண்டிருந்தது. கொடூர மழைக்கு தாங்காத மூணாறு மலை, உருக்குலைந்து சரிந்தது. உழைத்த களைப்பில் கண்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பை மண்ணோடு மண்ணாக மூடியது. ஒட்டுமொத்த தேசத்தையும் சோகத்தில் ஆழ்த்திய இந்த சம்பவத்தில் 60க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.

இதில் கணேசன் – தங்கம் தம்பதியும் அடக்கம். இவர்களின் செல்ல மகள்களான கோபிகா, ஹேமலதா, திருவனந்தபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி படித்ததால் அதிர்ஷ்டவசமாக இந்த பயங்கர நிலச்சரிவில் இருந்து உயிர் தப்பினர். இந்த கொடூர பேரிடர் நடப்பதற்கு சற்று முன்புதான், பெற்றோரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார் கோபிகா. அப்போது, ‘நீ டாக்டர் ஆக வேண்டும் என்பதே எங்களின் விருப்பம், கனவு’ என்று பெற்றோர் கூறியுள்ளனர்.  கோர விபத்தில் பெற்றோரை இழந்த சோகத்திலும், அவர்களின் கனவை நிறைவேற்றும் வகையில் கோபிகா தீவிரமாக படித்து  பிளஸ் 2 தேர்வில் அனைத்து பாடங்களிலும் ‘ஏ பிளஸ்’ தகுதியுடன் வெற்றிபெற்றார்.

தொடர்ந்து,  ‘பெற்றோரின் கனவை நிறைவேற்றுவதே குறிக்கோள்’ என்று இரவு பகலாக படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று, பாலக்காடு அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் பெற்றுள்ளார். பெற்றோரை இழந்த சோகத்திலும், மனம் தளராமல் படித்து எம்பிபிஎஸ் படிப்பில் சேர்ந்துயுள்ள மாணவி கோபிகாவிற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.