பால் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம்… ஓரே போடாய் போட்ட திமுக கூட்டணி கட்சி!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜவஹிருல்லா எம்எல்ஏ, திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், நமது நாடு ஜனநாயக பாதையில் பயணிக்க வேண்டுமா அல்லது பாசிச பாதைக்கு செல்ல வேண்டுமா என்பதை நிர்ணயிக்கும் தேர்தலாக இருக்கும். மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒருமித்து தேர்தலை சந்திக்க வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தேர்தலை சந்திப்பதுடன் மத சார்பற்ற கட்சிகள் வெற்றி பெறவும் பாடுபடுவோம்.

ஆட்சிக்கு வந்தவுடன் திமுக பால் விலையை குறைத்தது. தற்போது பால் விலை, மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசு பல்வேறு பொருளாதார நிபந்தனைகளை தமிழக அரசு மீது திணிப்பதன் விளைவாக இவற்றின் விலை உயர்த்தப்படுகிறது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் பால் விலை, மின்கட்டணம் மட்டுமின்றி, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது. வங்கதேசத்தை விட நமது நாட்டின் ரூபாய் மதிப்பு மிக மோசமாக சரிந்து வருகிறது. மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை நாட்டை பொருளாதார சீரழிவுக்கு கொண்டு செல்கிறது.

சாலை பாதுகாப்பு அவசியம் என்பதால் கட்டுப்பாட்டுக்காக போக்குவரத்து விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதிகமாக உள்ள அபராத தொகையை குறைக்க வேண்டும். நெடுங்கால கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு உரிய முடிவெடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக மிகுந்த கவலையை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த வழக்கை தமிழக காவல்துறையே சிறப்பாக கையாண்டது தொடர்ந்து தமிழக காவல்துறை விசாரித்து இருந்தால் கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த ஜமேஷா உபயனை இயக்கியது யார், அவரது பின்புலம் என்ன என்பன போன்ற உண்மைகள் வெளி வந்திருக்கும்.. இந்த உண்மைகளை என்ஐஏ வெளிகொணர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறினார்.

இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் ஹாஜா கனி, பொருளாளர் சபியுல்லாகான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.