புதுடில்லி: புதிய பார்லிமென்ட் கட்டுமானப் பணிகள் வேகமாக நடப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.புதுடில்லியில் தற்போதுள்ள பார்லிமென்ட் கட்டடம், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இதற்கு பதிலாக புதிய பார்லிமென்ட் கட்டடம் கட்டுவதற்கு, 2020 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
‘சென்ட்ரல் விஸ்டா’ என்ற இந்த திட்டத்தின் கீழ் புதிய பார்லிமென்ட், மத்திய அரசு செயலகம், பிரதமர் அலுவலகம், ராஜபாதை சீரமைப்பு ஆகிய பணிகள் நடக்கின்றன.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்து, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரை நவம்பரில் புதிய கட்டடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் இன்னும் முடிவடையவில்லை.இந்நிலையில், மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கட்டுமானப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
இதன்பின் அவர் கூறியதாவது: புதிய பார்லிமென்ட் கட்டுமானப் பணிகள் வேகமாகவும், சீராகவும் நடக்கின்றன. இந்திய கட்டடக் கலையின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக இந்த கட்டடம் விளங்கும். கட்டுமானப் பணிகளில், 4,000க்கும் அதிகமான தொழிலாளர்கள், 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர். பணிகள் முடிந்ததும், திறப்பு விழா குறித்த அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார். கட்டுமானப் பணிகள் குறித்த புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் அமைச்சர் வெளியிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement