விக்கிரவாண்டி: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தீயணைப்பு நிலைய எல்லைக்குட்பட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏற்படும் விபத்துகள் பேரிடர் மீட்பு பணிகள், தீ விபத்துகள், தேசிய நெடுஞ்சாலை விபத்துகள் போன்றவற்றில் மீட்பு பணிக்காக தினம்தோறும் தீயணைப்புத் துறையினர் சென்று வருகின்றனர்.
ஆனால் தீயணைப்பு நிலையம் விக்கிரவாண்டி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ளது. மேலும் அந்த இடத்தில் தீயணைப்பு வாகனம் நிறுத்த போதுமான இடவசதி இல்லாமலும் அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்களில் குடிநீர் நிரப்பவும், முதலுதவிக்காக அவசரமாக வெளியில் எடுத்துச் செல்லவும் போதிய வழி இல்லாமல் உள்ளது. இதனால் விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலோ அல்லது போர்க்கால அடிப்படையில் தேவைகள் ஏற்பட்டாலோ தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு செல்ல காலதாமதமாகிறது. இதனால் சில நேரங்களில் பெரிய அளவில் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. வரும் காலங்களில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பருவமழையில் விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான ஏரிகள் தற்போது 90 சதவீதம் நிரம்பியுள்ளன. மேலும் வரும் காலங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தீயணைப்புத் துறையினர் தகவல் அறிந்த உடனே விரைந்து செல்ல வேண்டும்.
ஆனால் அதற்குரிய வசதி விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்தில் இல்லை. எனவே தீயணைப்பு நிலையத்திற்கு விக்கிரவாண்டி நகர பகுதியில் போதுமான இட வசதியுடன் கூடிய நிரந்தரமாக இடம் தேர்வு செய்து அமைத்து தர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.