"மம்தா பானர்ஜி பங்கேற்றதால் தான் நான் பங்குபெறவில்லை" – பாஜக அண்ணாமலை

“சேகர்பாபு ஒவ்வொரு காற்றுக்கும் வரும் பட்டத்தை போன்றவர் கட்சி மாறிக்கொண்டே இருப்பார் அதிமுகவில் இருந்த போது திமுகவை விமர்சித்தவர், நாளை எங்கிருப்பாரோ எனவும், மம்தா பானர்ஜி பங்கு கொள்ளும் ஒரு நிகழ்வில் பங்கு கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தினால் தான் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்கவில்லை எனவும், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை மாதவரத்தில் பாஜக மேற்கு மாவட்டம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று பங்கேற்று 350 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதுரையில் நடந்த வீடியோ காட்சியை பார்த்தால், சமுதாயம் எந்த அளவிற்கு கெட்டுப் போய் உள்ளது என்பதை அதில் பார்க்க முடிகிறது. அதில் மக்களையும் மாணவிகளையும் தாக்கியவர்களுக்கு பயம் கிடையாது. தமிழகத்தில் காவல் துறை மீது எந்த பயமும் இல்லை, சில நேரங்களில் காவல் துறை கடுமையாக தான் இருக்க வேண்டும். காவல் துறை கடுமையாகும் போது பாஜக துணை இருக்கும், இந்த விஷயத்தில் காவல்துறை கடுமையாக இல்லை என்றால் சாமானிய பெண் ரோட்டில் நடமாட கூட முடியாது.
ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைக்கிறேன், காவல் துறை சில இடங்களில் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும். ஓல்டு ஸ்டைல் காவல் துறை தேவை இல்லை. காவல் துறையின் கையை கட்டவிழ்த்து விட்டு சில விஷயங்களை தைரியமாக செய்ய சொல்ல வேண்டும், சமுதாயத்தில் அதை பண்ணவில்லை என்றால் சமுதாயம் என்ற ஒன்று இருக்காது. தமிழக அரசு காவல்துறையை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
image
மேலும் இல.கணேசன் இல்ல நிகழ்வில் பங்கேற்காததை குறித்து பேசிய அவர், “இல.கணேசன் பாஜகவின் மூத்த நிர்வாகியாக இருந்தவர். மாநில தலைவராக இருந்தவர். தொலைபேசி மூலம் அவர் இல்ல நிகழ்வில் நான் பங்கேற்கவேண்டுமென்று அன்போடு அழைப்பு விடுத்தார். நானும் வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அந்த நிகழ்வில் மம்தா பானர்ஜி பங்கு கொண்டதால், மம்தா பானர்ஜி பங்குகொள்ளும் ஒரு நிகழ்வில் பங்கு கொள்ளக்கூடாது என்ற எண்ணம் எனக்கு எழுந்ததால், நான் அதில் பங்கு கொள்ளவில்லை. மேற்கு வங்கத்தில் பாஜகவின் தொண்டர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்பதே இதன் பின்னணி. மற்றபடி இல.கணேசன் இல்லத்திற்கு விரைவில் சென்று அவரை சந்திப்பேன்” என கூறினார்.
image
தொடர்ந்து ஆர்எஸ்எஸ் குறித்து பேசிய அவர், “சேகர் பாபு மற்றும் திமுக நிர்வாகிகள் கட்சி மாறி கட்சி மாறி வருவார்கள். அதற்காகவே கட்சிக்கு விசுவாசமாக சில கருத்துக்களை சொல்கின்றனர். கட்சி மாறாமல் இருப்பவனுக்கு மட்டுமே தெரியும் ஆர் எஸ் எஸ் இயக்கம் பற்றி. சேகர்பாபு காற்றுக்கு வருகின்ற பட்டத்தை போல் கட்சி மாறுபவர். அவர் அதிமுகவில் இருந்த போது திமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்று அவரேவும் நெஞ்சை தொட்டு சொல்லட்டும்… இன்று திமுகவில் இருப்பதால், திமுகவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கருத்தை சொல்கிறார். இந்தியாவில் வட மாநிலங்களில் நடந்த கலவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது ஆர்.எஸ்.எஸ். இதை புரியாதவர்கள் ஆர்எஸ்எஸ் மீது அபாண்ட பொய் சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
image
மேலும் பேசுகையில், “சேகர் பாபு, சாப்பிடுகிற வீட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பேசுகிறார். திமுகவில் உள்ள சேகர்பாபு நாளை எங்கு இருப்பார் என தெரியவில்லை. அவர் சொல்வதை எல்லாம் பெரிதாக பொருட்படுத்த வேண்டாம்” என கூறினார். கோவை கார்வெடிப்பு சம்பவம் குறித்து பேசுகையில், “கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று இன்று அனைவரும் கூறுவதற்கு முக்கிய காரணம், பாஜக தான். `சிலிண்டர் வெடி விபத்து’ என கூறி அந்த தாக்குதலை மறைக்க நினைத்த திமுகவினை தீவிரவாத தாக்குதல் என்று ஒப்புக்கொள்ள வைப்பதற்கு பாஜகவிற்கு 10 நாட்கள் தேவைப்பட்டது” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.