விருதுநகர் மாவட்டம், மேலப்பரளச்சியில் இரண்டு சாதிப்பிரிவின் பிரச்னையால், 169 மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாக்கப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து மேலப்பரளச்சி ஊர்வாசிகளிடம் கேட்கும்போது, “செங்குளம், வடக்குநத்தம், புல்வநாயக்கன்பட்டி, பொம்மநாயக்கன்பட்டி, ராஜகோபாலபுரம் ஆகிய 5 ஊர்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் அதிக அளவு வசித்து வருகின்றனர். அதைத் தவிர்த்து பரளச்சி, மேலையூர், வடக்குநத்தம் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் பட்டியலினத்தவர்கள் பெருவாரியாக வசிக்கின்றனர். மற்ற ஊர்களில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இருந்தாலும் மேலப்பரளச்சியில் உள்ள இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் அதிக கவனமெடுத்து பாடம் எடுக்கிறார்கள் என்பதால் இங்குதான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிலையில், பட்டியலினத்தவர்களுக்கும், குறிப்பிட்ட அந்த சமுதாயத்தினருக்கும் இடையே 15 வருடங்களுக்கு மேலாக சாதிப் பிரச்னை நிலவி வருகிறது. எப்போதெல்லாம், சாதியின் பெயரால் ஊர்வாசிகளிடையே சண்டை வருமோ, அந்த சமயங்களிலெல்லாம் பள்ளிக்கூடத்தில் இரண்டு ஊர் மாணவர்களுக்கு இடையேயும் சண்டை வரும். இதையெல்லாம் தீர்க்கவே முடியாது..!” என்கின்றனர் சலிப்பாக.
பிரச்னையின் வேர் அறிய பள்ளிக்கூட மாணவர்களிடத்தில் பேசினோம். “குறிப்பிட்ட சமுதாயம் சார்பாக பரளச்சி ஊருக்கு நடுவே புதிதாக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. அதை, மற்றொரு சமூகத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் அகற்றினர். சமுதாயக் கொடிக்கம்பம் அகற்றப்பட்டதை வீடியோ எடுத்த மாணவர், புகார் அளித்த சமூகத்தினருக்கு பயந்து, தங்கள் சமுதாய கொடிக்கம்பத்தை போலீஸ் அகற்றியதாக தனது ‘வாட்ஸ் அப்’ ஸ்டேட்டஸில் வைத்தார். இதைப்பார்த்த எதிர்தரப்பு மாணவர்கள், ‘குறிப்பிட்ட அந்த ஸ்டேட்டஸை புகைப்படமெடுத்து தன் சமுதாயம் சார்ந்த மற்ற மாணவர்களுக்கு அனுப்பிவிட்டனர். இதனால், வகுப்புக்குள் வைத்து இருதரப்பு மாணவர்களுக்கிடையே வாக்குவாதம் வளர்ந்து, பின்னர் அதுவே அடிதடியாகிவிட்டது” என்றனர்.
இது குறித்து பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஐசக் பேசுகையில், “10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 479 மாணவர்கள் இந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். தற்போது சாதிரீதியாக மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவத்தையடுத்து செங்குளம், வடக்குநத்தம், புல்வநாயக்கன்பட்டி, ராஜகோபாலபுரம் உட்பட 5 ஊர்களிலிருந்து இங்கு படிக்க வரும் மாணவர்கள் 169 பேர் பள்ளிக்கூடத்திற்கு வருவதில்லை. இதை சரிசெய்ய சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினோம். அதில் பேசியவர்கள், `சாதிரீதியான தாக்குதல் எங்கள் ஊர் மாணவர்களின் மீது தொடர்வதால் இனி நாங்கள் யாரும் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கிடுங்கள், நாங்கள் வேறு பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்கிறோம்’ என்றனர். இந்தச் சூழலில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தற்சமயம் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம்” என்றார்.
ஆசிரியர்களிடம் பேசுகையில், “முற்பகல் இடைவேளை நேரத்தில் சாதிப்பெயரால் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின், இந்த விவகாரம் மதிய உணவு இடைவேளையில் வீரியமடைந்து அவர்களுக்குள் சன்டையாக மாறிவிட்டது. யாரும் எதிர்பாராத நேரத்தில் மாணவர்கள் ஒருவருக்கொருவர் கொரில்லா முறையில் தாக்கி சன்டையிட்டது உண்மையில் வருத்தமளிக்கிறது. மாணவர்களின் சன்டையை தடுக்கச் சென்ற ஆசிரியரைக்கூட அவர்கள் கீழே தள்ளிவிட்டனர். மாணவர்களின் சன்டை தொடர்பாக காவல்துறையின் தலையீட்டுக்கு பின்பே நிலைமை கட்டுக்குள் வந்தது. இந்த பிரச்னையை தணிப்பதற்கு, இருதரப்பைச் சேர்ந்த மாணவர்களும் 10 நாள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் அப்படி செய்ததற்கு, ஒருதரப்பைச் சேர்ந்த சமுதாயத்தினர் எங்கள் மீதே சாதி வன்மத்தை திணித்துவிட்டனர். நாங்கள் குறிப்பிட்ட சமுதாயத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி பத்திரிகைகளுக்கும் தவறான தகவல் கொடுத்துவிட்டனர். இத்தகைய சூழலில், அவர்கள் கேட்பது போல் மாற்றுச் சான்றிதழ் வழங்கி மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்குவதில் ஆசிரியர்களான எங்களுக்கு விருப்பமில்லை” எனக் கூறினர்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரியிடம் பேசுகையில், “பிரச்னையைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக குறிப்பிட்ட சமுதாயத்தைச் சார்ந்த 169 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதில், அரசுப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12-ம் வகுப்பினர் சுமார் 40 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் அனைவருக்குமே ஆண்டு இறுதித்தேர்வு எழுதுவதற்கு வரிசை எண் ஒதுக்குவதற்கான பணிகள் முடிக்கப்பட்டு துறையின் கவனத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், மாணவர்கள் அத்தனை பேருக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுக்கச் சொல்லிக்கேட்டது எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு இடையேயான பிரச்னை, பள்ளிக்கூடத்துக்குள் உருவானது அல்ல. ஊர்சார்ந்த பிரச்னை திசைமாறி மாணவர்கள் மத்தியில் சன்டையாக வெளிப்பட்டிருக்கிறது. இதை சரிசெய்ய இருதரப்பிலிருந்தும் ஆட்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டங்கள் நடத்தினோம். ஆனால், குறிப்பிட்ட 5 ஊரை சேர்ந்தவர்கள் மட்டும் தங்களது வாதத்தில் பிடியாக இருந்தனர். அவர்கள் கேட்டது போல, மீண்டும் பள்ளிக்குள் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் அளித்துவிடலாம். ஆனால், பள்ளிக்கூடத்திற்கு வெளியே நடக்கும் பிரச்னைக்காக ஆசிரியர்களை பணையம் வைப்பது முறையாகாது. எனவே இந்த கல்வியாண்டு படிப்பை தடையின்றி மாணவர்கள் நிறைவு செய்யட்டும். பின், மாணவர்களின் பெற்றோர்களின் விருப்பம் எதுவோ, அதுபடியே கோரிக்கைகளை நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுக்கிறோம். சாதிரீதியான சன்டை இழிவானது என்பதை இருதரப்பு மாணவர்களும் தன்னகத்தே உளப்பூர்வமாக ஏற்கவேண்டும். அதுமட்டுமே மாணவர்களை இதுபோன்ற சாதிய சிக்கல்களிலிருந்து காப்பாற்றும்” என்றார்.
ஐந்து ஊர்களின் குறிப்பிட்ட சமுதாய தரப்பிலிருந்து நம்மிடம் பேசிய நபர் ஒருவர், “கொடிக்கம்பம் நாட்டியதால் ஆரம்பித்த பிரச்னை என்றால் கொடிக்கம்பம் நாட்டும்போதே அதை தடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு, எங்கள் ஊர் மாணவர்களின் மீது தாக்குதல் நடத்தியது தவறான செயல். மதிய உணவு இடைவேளையில் மாணவர்களுக்கிடையே உருவான மோதலில், ஊர்காரர்களும் சேர்ந்து எங்கள் ஊர் மாணவர்களை தாக்கியிருக்கின்றனர். கைலி அணிந்துகொண்டு மதுபோதையில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே காத்திருந்த மாற்று சமுதாய முன்னாள் மாணவர்கள், மோதல் ஆரம்பித்ததும் கும்பலாக பள்ளிச்சுவர் ஏறிக்குதித்து அடிதடியில் இறங்கியுள்ளனர். அப்போது, சண்டையை தடுக்கவந்த ஆசிரியரைக்கூட அவர்கள் கீழே தள்ளிவிட்டு காயப்படுத்தியுள்ளனர். அப்போது, `இந்தப் பள்ளிக்கூடத்துல அவங்க சாதி பயலுக எவனெவன் இருக்கானோ அத்தனை பேரையும் அடிங்கலே’ என ஒருவர் குரல் கொடுக்கவும், எங்கள் ஊர் மாணவர்கள் அத்தனை பேர் மீதும் மூர்க்கத்தனமான தாக்குதல் நடந்திருக்கிறது. இந்த தாக்குதலுக்குப் பிறகு எங்கள் சமுதாய மாணவர்கள் தன்னிச்சையாக நாங்கள் இனி பள்ளிக்கூடத்திற்கு போகமாட்டோம் எனக் கூறிவிட்டனர். மாணவர்களின் பெற்றோர்களும், பிள்ளைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் பள்ளிக்கு படிக்க அனுப்புவதில் எந்த பயனும் இல்லை. மேலும், இந்த தாக்குதல் இன்று, நேற்று அல்ல, காலங்காலமாக எங்களின் பிள்ளைகள் மீது தொடர்ந்து நடக்கிறது. எனவே, இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை பள்ளிக்கூடத்திற்கு மாணவர்களை அனுப்புவதில்லை, மாற்றுச் சான்றிதழ் பெற்று அருகே உள்ள வேறு பள்ளிக்கூடங்களில் சேர்ப்பதெனவும் முடிவு செய்தனர். ஏனெனில், படிக்கும் இளைய தலைமுறையினர் சாதியின் பெயரால் கெட்டழிவதற்கு, தெரிந்தே நாம் நமது பிள்ளைகளை பலிகொடுக்கவா? என எண்ணித்தான் மாற்றுச் சான்றிதழ் பெறமுயன்றோம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தோம். ஆனால் 5 நாள்களாகியும் அதிகாரிகள் எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்தனர். எனவே எங்கள் பிரச்னைக்கு தீர்வுக்கேட்டு, 5 ஊர் மக்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிப்புக்கொடுத்தோம். அதன்பிறகே அவசர, அவசரமாக சாமதானக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து கூட்டத்தை நடத்தினர். அதில் பேசிய அதிகாரிகள், `இனி இதுபோன்ற மோதல் ஏற்படாமல் இருக்க உறுதியான பாதுகாப்பு வழங்கப்படும். பள்ளி வளாகம் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா மூலமாக கண்காணிக்கப்படும் என உறுதியளித்தனர். இதை நாங்கள் எழுத்துவடிவில் உறுதிப்பத்திரமாக கேட்டுள்ளோம். ஆனாலும் அதிகாரிகளின் இந்த சமாதானத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரை மனதுடன் சம்மதித்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பியுள்ளோம். மீண்டும் இதுபோன்றதொரு தாக்குதல் நடந்தால் சுற்றுவட்டாரத்தில் எங்கள் சமுதாயத்தினர் வசிக்கும் 25 கிராம மக்களையும் ஒன்றுத்திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம்” என்றார்.