"2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி!" – நாமக்கல்லில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

நாமக்கல், சேலம் சாலையில் உள்ள பொம்மக்குட்டைமேட்டில், அ.தி.மு.க-வின் 51-வது வருட துவக்க விழாவை முன்னிட்டு, நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே, இரண்டு முறை நாள் குறித்து, மழை, சட்டசபைக் கூட்டம் உள்ளிட்டக் காரணங்களால், இரண்டு தேதிகளிலும் ரத்தானது. அதைத் தொடர்ந்து, இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தங்கமணி இந்தப் பொதுக்கூட்ட ஏற்பாட்டை செய்ததோடு, பொதுக்கூட்டத்தில் முன்னிலை வகித்தார். பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி,

நாமக்கல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி

“பொன்விழா முடிவுற்று, இன்று 51-வது ஆண்டு துவக்க விழாவை கொண்டாடுகிறோம். நாமக்கல் மாவட்டமே அதிர்ந்துபோகும் அளவுக்கு இங்கே கடல்போல் மக்கள் வெள்ளம் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க தொடங்கி 50 ஆண்டுகளில், சுமார் 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சி அ.தி.மு.க. ஆனால், ஸ்டாலின் பேசுகிறார், ‘அ.தி.மு.க பிளவுப்பட்டிருக்கிறது. மூன்று, நான்காக உடைந்து போயிருக்கிறது’ என்று சொல்கிறார்.

ஆனால், ஸ்டாலின் அவர்களே இப்போது இந்தக் கூடட்த்தை நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மூன்றாக, நான்காக உடையவில்லை, ஒன்றாக இருக்கிறது என்பது இந்த பொதுக்கூட்டம் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க-வை முடக்க வேண்டும் என முயற்சி செய்கிறார். அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தது. கடந்த ஆட்சியில் நாங்கள் சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டியிருந்தது. அப்போது, அராஜகம் செய்து குழப்பம் ஏற்படுத்தியவர் ஸ்டாலின். அ.தி.மு.க அரசை வீழ்த்துவதற்காக சட்டமன்றத்தில் வாக்களித்தவர் ஓ.பி.எஸ். எதிரிகளுக்கு வழிவிடக் கூடாது என நினைத்து ஓ.பி.எஸ் அவர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.

நாமக்கல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

ஆனால், தற்போது பி டீம் உருவாக்கி கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றனர். தி.மு.க, அ.தி.மு.க-வை எதிர்க்க முடியாத நிலையில், நம் மீது வழக்கு போடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறது. கொல்லைப் புறம் வழியாக நுழைந்து நம்மை வீழ்த்த முயன்று வருகின்றனர். எத்தனை வழக்குகள் போட்டாலும் அதனை தவுடுபொடியாக்கி, அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்கும். ஸ்டாலின், தனது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஊடகத்தை மிரட்டி தவறான கருத்தை பரப்பி வருகிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும். அதற்கு, இந்தக் கூட்டம் பிள்ளையார் சுழி போட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் யார் போட்டியிட்டாலும், நிச்சயமாக வெற்றி பெறுவார்கள். ஸ்டாலின் கனவு எதிர்காலத்தில் பலிக்காது. 2024 தேர்தலில் கழகம் சார்பில் போட்டியிடும் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு அச்சாணி இக்கூட்டம். இங்கே 1,30,000 பேர் கூடியுள்ளனர். ஸ்டாலின் அவர்களுக்கு மறதி அதிகம் என கருதுகிறேன். ஒரு பொம்மை போல் முதல்வர் உள்ளார்.

நாமக்கல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

கடந்த 10 ஆண்டுக்கால அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு, தற்போது அடிக்கல் நாட்டி தொடங்கி வைப்பதே அவரது சாதனை. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து, சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பிருக்கிறது. இரண்டிலும் அ.தி.மு.க கூட்டணி அமோக வெற்றிபெறும். பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே இறுதியானது. அங்கே கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான். மறுபடியும் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.