ஆம் ஆத்மி மீதான புகார் பற்றி சிபிஐ விசாரணை கோரி சுகேஷ் ஆளுநருக்கு கடிதம்: சிறையில் தனக்கு அசம்பாவிதம் நடக்கலாம் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென சுகேஷ் சந்திரசேகர் டெல்லி ஆளுநருக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கட்சியில் முக்கிய பதவி மற்றும் மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவதாக ஆம் ஆத்மி உறுதி அளித்ததாகவும் இதற்காக கட்சிக்கு பல கோடி ரூபாய் கொடுத்ததாக குற்றம்சாட்டினார். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநருக்கு சுகேஷ் கடிதம் எழுதி இருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சுகேஷ் டெல்லி ஆளுநர் வினய் சந்திரசேகருக்கு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கின்றார். இதில், ‘‘சிறையில் எனக்கு நெருக்கடி அதிகரிக்கின்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த உண்மை வெளிவருவதற்கு முன் ஏதாவது அசம்பாவிதம் நிகழலாம். கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக உடனடியாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். சத்யேந்தர் ஜெயின் மற்றும் டெல்லி சிறைகளின் இயக்குனர் ஜெனரல் சந்தீப் கோயல் ஆகியோர் தரப்பில் இருந்து எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகின்றது. எனது அறிக்கைக்கு பின் சிறையில் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென டெல்லி மாநில பாஜ கட்சியும் வலியுறுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.