"இபிஎஸ் தலைமையில் கூட்டணி: வரும் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி" – எஸ்பி.வேலுமணி நம்பிக்கை

“வரும் நாடாளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். அதன் மூலம் நாடாளு மன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி பெறுவோம்” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கோவையில் தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் ஹஜ்ரத் நூர்ஷா அவுலியா தர்காவில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீண்டும் அமைந்திட சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், கேர்.ஆர்.ஜெயராம் ஆகியோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “பாராளுமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். பாராளுமன்றத் தேர்தலில் 40 தொகுதியும், சட்டமன்றத்தில் 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறுவோம்” என தெரிவித்தார்.
image
தொடர்ந்து பேட்டியளித்த தமிழ் மகன் உசேன், “எடப்பாடியார் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளராக வேண்டியும், வரும் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வேண்டும் என மக்கள் விரும்பும் நிலையில், மீண்டும் முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும் என 75 மாவட்டங்களில் உள்ள 70 தர்காகளுக்கு ஆனமிக பயணம் மேற்கொண்டுள்ளேன். இதில், 39 வது மாவட்டமாக கோவை மாவட்டம் வந்துள்ளேன்.
மிக அதிகமான கழக தொண்டர்கள் சமய வேறுபாடின்றி இந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டுள்ளனர். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் வரவேண்டும். இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் ஓரே இயக்கம் அதிமுக தான். உலமாக்களுக்கு ஒய்வூதியம் வழங்கிய கட்சி அதிமுக.
image
திமுக ஆட்சியில் கோவைக்கு இதுவரை ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. எங்கு பார்த்தாலும் அடக்குமுறை, வன்முறை, பாலியல் வன்முறை நடக்கிறது. கோவை சாலைகள் குளங்களை போல காட்சியளிக்கிறது. அதிமுக இஸ்லாமியர்களின் பாதுகாப்பு கேடயம். 21 ஆண்டுகள் இப்தார் நோம்பை நடத்தியவர் ஜெயலலிதா. இஸ்லாமியராக இருந்தாலும் எனக்கு மதம், சாதி கிடையாது. பாபுஜி சாமிகள் நமக்கு சித்தப்பாதான். துவா நிகழ்வில் பாபுஜி சாமிகள் கலந்து கொண்டுள்ளார்” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.