அபிராமம் அருகே 2 ஆண்டிற்குள் அதிமுக ஆட்சியில் திறந்த பாலம், சாலை சேதம்

சாயல்குடி :  அபிராமம் அருகே ஆண்டநாயகபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்த பாலம், சாலை 2 ஆண்டிற்குள் சேதமானதால் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
கமுதி அருகே அபிராமம் பேரூராட்சியில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. வளர்ந்து வரும் நகரமாக விளங்குகிறது. இதனை சுற்றி நத்தம்,ஆண்டநாயகபுரம் கண்ணத்தான், மேலக்கொடுமலூர், ஆனைச்சேரி, தட்டனேந்தல், நெடியமாணிக்கம், மணலூர், வைத்தியனேந்தல், கீரனூர், செல்வநாயகபுரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொடர்ச்சியான கிராமங்களும் உள்ளன. இந்த வழித்தட பாதையை வீரசோழன், நரிக்குடி, பார்த்திபனூர் வரை 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதுபோன்று முதுகுளத்தூர், தேரிருவேலி, கடலாடியை சேர்ந்தவர்கள் மதுரை செல்வதற்கு அபிராமம் வழித்தடத்தையே பயன்படுத்தி வருகின்றனர். சுற்று வட்டார கிராமமக்கள் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட எவ்வித பொருட்கள் வாங்கவும், மேல்நிலைக்கல்வி, மருத்துவ உதவி போன்றவற்றிற்கு அபிராமம் வந்து செல்கின்றனர். மேலக்கொடுமலூரில் பிரசித்தி பெற்ற முருகன்கோயில் உள்ளது. இங்கு வெள்ளி, செவ்வாய் மற்றும் விஷேச காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் உடையநாதபுரம் முதல் அபிராமம் பஸ் ஸ்டாண்ட் வரை ஒருவழி பாதையாக இருப்பதால், அபிராமம் கடை தெருவிற்குள் இரண்டு வாகனங்கள் எதிர், எதிரே விலகி செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் இருசக்கர வாகனத்தில் செல்வோர், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன் விபத்துகளும் நடந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கண்ணத்தான் வழியாக அபிராமம், பார்த்திபனூர் சந்திப்பு சாலை வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதன் வழித்தடத்தில் உள்ள ஆண்டநாயகபுரத்தில் 2019ம் ஆண்டில் ரூ.5 கோடி மதிப்பில் பாலம் அமைக்கப்பட்டது. தொடர்ச்சியாக நத்தம்,நெடியமாணிக்கம் வரை தார்ச்சாலையும் அமைக்கப்பட்டது. இதனை 23.2.2021ல் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

ஆனால் சாலை மற்றும் பாலம் தரமற்றதாக அமைக்கப்பட்டதால் ஆறு மாதத்திலேயே பாலத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனை போன்று சாலையும் குண்டும், குழியாகி போனது. இதனால் சாலையில் வரும்போது விபத்து ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியினர் கூறும்போது, ஆறு வழித்தடம் செல்வதால் தரைப்பாலம் சேதமடைந்து காணப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையை தொடர்ந்து புதிய மேம்பாலம் அமைக்கப்பட்டது.

ஆனால் தரமற்று கட்டப்பட்ட நிலையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பதற்காக இரவோடு, இரவாக பணிகள்அவசர,அவசரமாக நடந்தது.இதனால் 6 மாதத்திற்குள் சேதமானது. தற்போது 2 ஆண்டுகளுக்குள் சாலை, பாலம் என அனைத்து பகுதிகளிலும் விரிசல், சேதம் ஏற்பட்டு வருகிறது. இருசக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது. கார்களின் முன் பகுதி, பக்கவாடு தட்டு, சேதம் ஏற்படுகிறது.மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் பாலம் இடிந்து விடும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தை தரக்கட்டுபாட்டு அதிகாரிகள், பொறியியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.