கிராமத்து கதையில் நடிக்க ஆசை: அசோக் செல்வன்

சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக் செல்வன். அதன்பிறகு பீட்சா 2, தெகிடி, சாவலே சமாளி, கூட்டத்தில் ஒருவன் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. ஓ மை கடவுளே என்ற படத்தை சொந்தமாக தயாரித்து நடித்தார். அந்த படம்தான் அவருக்கு அடையாளம் கொடுத்தது. மரைக்காயர், மன்மதலீலை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளிவந்த நித்தம் ஒரு வானம் படம் அவருக்கு இன்னும் கூடுதல் பெயரை பெற்றுக் கொடுத்தது.

இந்த நிலையில் நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நான் சினிமா பின்புலம் இல்லாமல் திரைத்துறைக்கு வந்தவன். நிறைய கஷ்டப்பட்டிருக்கிறேன். ஒவ்வொரு படமும் மாறுபட்ட களங்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படித்தான் என் படங்களை தேர்ந்தெடுக்கிறேன். நித்தம் ஒரு வானம் படமே மூன்று கேரக்டர்கள் என்பதால்தான் நடித்தேன் . இப்போது அதற்கு வரும் பாராட்டுக்கள் மனதிற்கு மிகுந்த சந்தோஷத்தை தந்துள்ளது.

அடுத்தடுத்து மாறுபட்ட களங்களில் நிறைய படங்கள் செய்யவுள்ளேன். கிராமத்து கதையில் நடிக்க வேண்டுமென எனக்கும் ஆசை இருக்கிறது. இப்போது ஒரு படத்தில் பேசி வருகிறோம் விரைவில் கிராமத்து கதையில் என்னை பார்க்கலாம். பல ஹீரோயின்களுடன் இணைந்து நெருக்கமாக நடித்திருந்தாலும், இதுவரை எந்த நடிகையையும் நான் காதலிக்கவில்லை. அரேஞ்டு மேரேஜில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனது திரைத்தொழில் பற்றி நன்கு புரிந்துகொண்ட பெண்ணை திருமணம் செய்வேன். கண்டிப்பாக அது காதல் திருமணமாகத்தான் இருக்கும். அடுத்ததாக சரத்குமாருடன் இணைந்து ஒரு திரில்லர் படத்தில் நடித்துள்ளேன். மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறேன். அது பற்றிய தகவல்கள் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.