ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலை: அதிமுக, மதிமுக, நெடுமாறன் வரவேற்பு..

டெல்லி: ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்ற அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்து உள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் போலவே நிவாரணம் பெற 6 பேரும் தகுதி உள்ளவர்கள் என்று கூறிய உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்தவாக அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் 6 பேர் விடுதலை  தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் வைகைச்செல்வன் (இபிஎஸ் தரப்பு), நீண்ட நாள் சிறையில் இருந்து தண்டனை பெற்றுவிட்டதால், அவர்கள் விடுதலை என்பது நியாயமான கருத்து என கூறினார். இந்த வழக்கு கோப்புகள் மாறி மாறி கைமாறி சென்ற நிலையில், இபிஎஸ் பேரறிவாளனுக்கு பரோல் கிடைக்க உதவினார் என்றார். மனிதாபிமான அடிப்படையில் இந்த தீர்ப்பை அதிமுக வரவேற்கிறது என கூறினார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவிக்கையில், 30 ஆண்டுகள் எந்த தவறும் செய்யாமல் இருண்ட சிறையிலே வாடி, வதங்கிய தூக்கு கயிற்றின் நிழலிலே சித்திரைவதைப்பட்ட 6 பேர் இன்றாவது விடுதலை ஆனார்களே என்ற போது நிம்மதி பெரூமுச்சு விட முடிகிறது. அவர்களுக்கு விமோர்சனம் கிடைத்துள்ளது. ஆனால், இந்த 30 ஆண்டுகள் அவர்களுக்கு திரும்ப கிடைக்கப்போவதில்லை. அவர்கள் பட்ட வேதனை, அவர்கள் பட்ட துன்பம் நீங்கப்போவதில்லை, இருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்ததற்கு மிகுந்த மகிழ்ச்சியோடு பாராட்டுகிறேன். அவர்களுகு ஒரு பெரிய விமோர்சனம், அவர்களுக்கு ஒரு பெரிய நிம்மதி கிடைத்ததிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன். பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படையிலேயே இவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, இவர்கள் விடுதலையை எதிர்த்து மனு தாக்கல் செய்தால் எடுபடாது. இந்த 6 பேருக்கும் கிடைத்த விடுதலையை எந்த காரணம் கொண்டும் யாராலும் மாற்ற முடியாது. உச்சநீதிமன்றம் சிந்தித்து தான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது என்று வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவனர் பழ.நெடுமாறன், உச்சநீதிமன்றத்தின்  இந்த தீர்ப்பு மக்கற்ற மகிழ்ச்சியளிக்கிறது என கூறினார். பல கட்டங்களாக இவர்களது விடுதலைக்காக போராடி வந்தோம். மேலும் பலதரப்பினரும் இந்த விடுதலைக்காக போராடினார்கள், அதன் பலனாக இவர்கள் விடுதலையை பார்க்கிறேன். இதற்காக முந்தைய அதிமுக ஆட்சிக்கும், தற்போதைய திமுக ஆட்சிக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். மேலும் விடுதலையான 6 பேரில், 4 பேர் ஈழதமிழர்கள். அவர்கள் 4 பேரையும் அவர்களது உறவினர்கள் எந்தெந்த நாடுகளில் வாழ்கிறார்களோ அங்கு அனுப்ப வேண்டும் என்றும், அவர்களை சிறப்பு முகாம்களுக்கு அனுப்பிவிடவேண்டாம் என்றும் கோரிக்கை வைப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தீர்ப்பு குறித்த நளினி தரப்பு வழக்கறிஞர் புகழேந்தி பேசியபோது, இந்த தீர்ப்பு மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார். தொடர்ச்சியாக அரசியல் காரணத்திற்காக இவர்கள் விடுதலை மறுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது, அரசியல் அமைப்பு சட்டத்தை உச்சநீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது மகிழ்ச்சி யளிக்கிறது என கூறினார். ஒரு நபரை விடுவிக்கும்போது, மற்றவர்களுக்கு மாறுபட்ட தீர்ப்பை வழங்க முடியாது என்ற அந்த அடிப்படையில்தான் இவர்களுக்கான தீர்ப்பு கிடைத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.