ராமநாதபுரத்தில் 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிப்பு.! 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அபிராமம் அருகே கீழக்கொடுமலூர் கிராமத்தில் பழமையான எழுத்து பொறித்த கல்வெட்டு இருப்பதாக அந்த ஊரைச் சேர்ந்த கருப்புராஜா தகவல் கொடுத்துள்ளார்.

அந்த தகவலின்பேரில், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சி சுந்தரம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் அந்த ஊருக்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டதில், அந்தக் கல்வெட்டு, விஜயநகர பேரரசு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு என்பது தெரிய வந்தது. 

இது குறித்து கள ஆய்வு செய்தவர்கள் தெரிவித்ததாவது, “இந்த கல்வெட்டு கீழக்கொடுமலூர் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவிலில் தேங்காய் உடைக்கும் படிக்கல்லாக இருந்து வந்துள்ளதனால், கல்வெட்டின் மையப்பகுதி முற்றிலுமாக சிதைந்து காணப்படுகிறது. 

ஒன்பது வரிகள் இடம் பெற்றுள்ள இந்த கல்வெட்டில் பெரும்பாலான வரிகள் சிதைந்து விட்டதனால், சில வரிகள் மட்டும் தெளிவான தமிழ் எழுத்துகளாக இருந்தன. அந்தக் கல்வெட்டில், “அந்தராயம் உபயம், மேற்கு, காடு, உட்பட்ட நிலத்தில் பழந்தே அராய்ச்சியும் வெட்டிபாட்ட” உள்ளிட்ட வார்த்தைகள் மட்டும் தெளிவாக தெரிகிறது. 

இந்த வார்த்தைகளை வைத்து பார்க்கும்போது ஆரம்பமும் முடிவும் இல்லாத ஒரு துண்டு கல்வெட்டில், ஊரின் பெயரும் திசையின் பெயரும் இடத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பதால், நிலத்தின் நான்கு எல்லையைக் குறிக்கும் விதமாகவும், அந்த நிலத்தை இறையிலியாக கொடுத்ததற்கான ஆதாரமாகவும் உபயம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கிறது. 

கல்வெட்டை இந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு விஜயநகர பேரரசு காலத்தில் நிவந்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த கல்வெட்டு எழுத்தின் அமைப்பை வைத்து பார்க்கும்போது 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.