புதுடெல்லி: கல்வியாளர் டாக்டர் விகாஸ் திவ்யகீர்த்தி கடவுள் ராமர் பற்றி கூறிய கருத்தால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உள்ள த்ரிஷ்டி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் விகாஸ் திவ்யகீர்த்தி. இவர் அண்மையில் வகுப்பறையில் பாடம் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அது தற்போது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அந்த வீடியோவில் விகாஸ் கீர்த்தி, “ராமாயணத்தில் போர் முடிந்த பின்னர் ராமர் சீதையிடம், தான் ராவணனுக்கு எதிராக போர் தொடுக்க சீதா காரணம் அல்ல என்றும் சீதா தனக்கு தகுதியானவர் அல்ல என்றும் கூறினார். சீதாவை அவர் நாய் உண்ட நெய்க்கு ஒப்பிட்டுப் பேசினார்” என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோவைப் பகிர்ந்து வரும் இந்து அமைப்புகள் பல டாக்டர் விகாஸ் திவ்ய கீர்த்தி கடவுளரை அவமதித்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் ஐஏஎஸ் பயிற்சி மையம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காட்டமாக வலியுறுத்தி வருகின்றனர்.
இந்துத்துவா தலைவர் சாத்வி ப்ராச்சி கீர்த்திக்கு எதிரான இணையப் போரை வலுப்படுத்த மாணவர்கள் பலரும் தங்கள் ஆசிரியருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். அவர்கள் ஆசிரியர் பேச்சு அடங்கிய முழு வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். அதில் விகாஸ்கீர்த்தி, “இந்திப் படங்களில் கடைசியில் நாயகனும், நாயகியும் சந்திக்கும்போது இருவரும் ஓடோடி வந்து இணைவர். அதுபோல் சீதா ராமரைக் காண மகிழ்ச்சியுடன் இருந்தார். ராமர் ராவணனை வீழ்த்திவிட்டார், நாம் மீண்டும் நாடு திரும்பப் போகிறோம் என்று மகிழ்ச்சியில் இருந்தார். ராமருக்கு சீதாவின் மகிழ்ச்சி புரிந்துவிட்டது. அவர் சீதாவை தடுத்தார். அப்போது அவர் சீதாவிடம் ஒரு விஷயத்தைச் சொன்னார். அதை நான் சொன்னால் என் நா அறுந்து துண்டாக கீழே விழுந்துவிடும்கூட ஆனாலும் அதை நான் சொல்ல வேண்டியுள்ளது. அதை நான் வருத்தத்துடனேயே சொல்கிறேன். ராமர் சீதாவிடம், நான் உனக்காக போர் செய்யவில்லை. என் ராஜ்ஜியத்துக்காகபோர் புரிந்தேன். நெய்யை நாய் நக்கிவிட்டால் அது நாம் புசிக்க தகுதியற்றதாகிவிடுகிறது. நீ இப்போது எனக்கு உகந்தவள் இல்லை என்று கூறினார்” என்று பேசியுள்ளார்.
இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், டாக்டர் விகாஸ் திவ்யகீர்த்தி அளித்தப் பேட்டியில், “நான் பேசியதை உறுதிப்படுத்த ஆதரங்கள் இருக்கின்றன. புருஷோத்தமன் அகர்வாலின் புத்தகத்தில் இருந்தே நான் இதனைத் தெரிவித்தேன். புருஷோத்தமன் அகர்வால் யுபிஎஸ்சி உறுப்பினராக இருந்தவர். ஆகையால் அவரது புத்தகத்திலிருந்து நாங்கள் மேற்கோள் காட்டி பாடம் எடுக்கலாம். நான் ராமாயணம், மகாபாரதம் வாசித்தது இல்லை. ஆனால் இந்தப் புத்தகத்தில் வால்மீகி ராமாயணத்தை மேற்கோள் காட்டித்தான் புருஷோத்தமனை இதனைக் குறிப்பிட்டிருக்கிறார்” என்று விளக்கினார்.