பூந்தமல்லி அருகே ஓடும் காரில் திடீர் தீ விபத்து

பூந்தமல்லியை அடுத்த சின்ன மாங்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன்(32), இவர் குடியிருக்கும் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் சென்னையில் உள்ள தனது தாயை அழைத்து வருவதற்காக இன்று காலை காரில் சென்று கொண்டிருந்தார். மாங்காடு குமணன்சாவடி சாலையில் சென்றபோது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதையடுத்து அவர் காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். 

அப்போது காரின் முன் பகுதி திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினார் . அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் தீயணைப்பு கருவியை கொண்டு தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. 

ஓடும் காரில் பெட்ரோல் பங்க் அருகே தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. பெட்ரோல் பங்க் அருகிலேயே தீப்பிடித்ததால் அந்த பணியாளர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காரில் ஏற்பட்ட மின் கோளாறு காரணமாக தீப்பிடித்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.