குண்டர் சட்ட கைதுகளில் விதிமீறல் இருந்தால் அரசுக்கு அபராதம்: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

மதுரை: குண்டர் சட்ட கைதுகளில் விதிமீறல் இருந்தால் ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்காசியை சேர்ந்தவர் ஜெயராமன். நான்கு வழிச்சாலை திட்டத்தை வேறு வழித்தடத்தில் நிறைவேற்றக் கோரி விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். இதனால் ஜெயராமன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் தென்காசி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் ஜெயராமன் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தனது கணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது மனைவி சுனிதா, உயர் நீதிமன்ற கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு இன்று பிறப்பித்த உத்தரவு: ”சென்னை உயர் நீதிமன்ற மற்றும் மதுரைக் கிளையில் தினமும் ஏராளமான ஆட்கொணர்வு வழக்குகள் தாக்கல் ஆகின்றன. இந்த வழக்குகள் 4 முதல் 6 மாதங்களுக்கு பிறகு விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

குண்டர் சட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில்தான் அதிக குண்டர் சட்டம் பிறப்பிக்கப்படுவதாக தேசிய குற்றபுலனாய்வு பிரிவின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. குண்டர் சட்டம் போதைப் பொருள் கடத்தல், மணல் கடத்தல் உட்பட 9 விதமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது பிறப்பிக்கப்படுகிறது. உயர் நீதிமன்ற கிளையில் 2022 ஜனவரி முதல் அக்டோபர் 31 வரை குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி 961 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 517 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. 445 வழக்குகளில் குண்டர் சட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 72 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. ஒரு வழக்கில் கூட குண்டர் சட்டம் உறுதி செய்யப்படவில்லை. 86 சதவீத வழக்குகளில் குண்டர் சட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் திருமங்கலம் – ராஜபாளையம்- செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பணிக்கான நிலம் கையகப்படுத்துதலை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் மனுதாரரின் கணவர் மீது குண்டர் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் கணவர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு 4 வாரத்தில் அரசு ரூ.25 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். அரசு இந்த உத்தரவை கருத்தில் கொண்டு குண்டர் சட்ட உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். குண்டர் சட்ட உத்தரவுகளில் சட்ட விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் ஒவ்வொரு வழக்கிலும் அரசுக்கு அபராதம் விதிக்கப்படும்” என்று நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.