திருச்சி சிறையில் நளினி பேட்டி! விடுதலையானவர்கள் யார் எந்த நாட்டுக்கு செல்வார்கள்?

திருச்சி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முருகன் சாந்தன் ஜெயக்குமார், ராபர்ட் தற்போது இலங்கை சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சந்திப்பதற்காக இன்று காலை சென்னை புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நளினி உள்ளிட்ட ஏழு பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு வருகை தந்துள்ளனர். சுமார் 6 மணி நேரம் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள நான்கு பேருடன் விவாதித்து விட்டு வெளியே வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசினார்கள். 

அப்போது பேசிய நளினி, ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான உண்மையான குற்றவாளிகள் யார் என்பது எனக்கு தெரியாது என்று அவர்கள் கூறியதாக நளினி தெரிவித்தார். சிறப்பு முகாமும் சிறை போன்றது தான் அதிலிருந்து 4பேரும் விடுவிக்கப்பட வேண்டும். மேலும்,  அவர்கள் செல்ல விரும்பும் நாட்டிற்கு,  அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என அரசுக்கு நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் எனது கணவரை நான் 6 மணி நேரம் சந்தித்து பேசவில்லை. அவரை சந்திப்பதற்கான நடைமுறைகளை முடிப்பதற்கு நீண்ட நேரம் சிறப்பு முகாம்  வாசலில் காத்துக் கிடந்தேன் என்றும் விளக்கம் தெரிவித்தார். அவர்களை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் முன் வைத்துள்ளேன். அதனை அவர் எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளார் என்று நளினி தெரிவித்தார்.

எங்களது குடும்பம் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியத்தை கொண்டது. இந்திரா காந்தி மறைவின் போதும்,  ராஜீவ் காந்தியின் மறைவின்போதும்,  அதற்காக கண்ணீர் வடித்து எங்களது குடும்பம்  வருந்தியிருந்தது.ராஜீவ் கொலையான போது எங்கள் குடும்பமே மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருந்தோம் என்று நளினி தெரிவித்தார்.

முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல விரும்புகிறார். எனது கணவர் முருகனுடன் நான் லண்டனுக்கு சென்று மகளுடன் வாழ விரும்புகிறோம் என்று கூறிய நளினி, விடுதலையான பின்னும் திருச்சி சிறப்பு முகாமில் அழைக்கப்பட்டுள்ளதால் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர் எம்று தெரிவித்தார்.

அவர்களை மிகுந்த சிரமப்பட்டு தேற்றினோம். எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று நளினி தெரிவித்தார்.

நாங்கள் நிரபராதிகள் தேவையில்லாமல், 32 ஆண்டுகள் சிறையில் இருந்தோம் என்று கூறிய நளினி, ராஜீவ் கொலையாளிகள் யார் என்று எங்களுக்கு தெரியாது. நாங்கள் அனைவரும் எங்களது குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நாங்கள் சிறையில் இருந்த போது நிறைய கோயில்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவது என்று வேண்டி இருந்தோம். அவற்றையெல்லாம் நிறைவேற்ற விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.

 முருகனைத் தவிர்த்த மற்றும் மூன்று பேரும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்திருந்தாலும், அங்கு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் அதற்கு இடம் கொடுக்குமா? என்று தெரியவில்லை. எனவே அவர்கள் விரும்புகின்ற நாட்டிற்கு அவர்களை அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று நளினி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.