திருவெண்ணெய்நல்லூர் அருகே குடிநீர் குழாயில் கழிவுநீர் கலப்பு-தொற்று நோய் பரவும் அபாயம்

திருவெண்ணெய்நல்லூர் :  விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  அருங்குறுக்கை  கிராமத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து  வருகின்றனர். இந்த கிராமத்தில் பாரத பிரதமரின் ஜல்தன் யோஜனா திட்டத்தின்  கீழ் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.  ஆனால் அந்த குடிநீர் விநியோக குழாயில் குடிநீர் வராததனால், குழி வெட்டி  அதன் வழியாக செல்லும் பிரதான குழாயிலிருந்து பொதுமக்கள் குடிநீர் எடுத்து  வருகின்றனர்.

சில இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதன்  வழியாக கழிவுநீர் கலந்து குடிநீருடன் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள்  புகார் தெரிவித்தனர். இதனால் அந்த கிராமத்தில் தொற்று நோய் பரவும் அபாயம்  உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சரி செய்து  குடிநீர் விநியோகம்  செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் தெரு, சாலைகள் மழையால்  சேதம் அடைந்து சேறும் சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் உள்ளது.  இதனால் திருக்கோவிலூர், திருவெண்ணெய்நல்லூர், பண்ருட்டி, கடலூர் போன்ற  நகரங்களுக்கு விவசாய விலை பொருட்களை கொண்டு செல்லும் விவசாய பொதுமக்கள்  போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை  சீர் செய்து கொடுக்குமாறும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அடிப்படை கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவில்லையென்றால் சாலை மறியல்  செய்யப்போவதாக அந்த கிராம பொதுமக்கள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.