பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் கர்நாடகாவில், சுவாமி விவேகானந்தரின் பெயரில் ‘விவேகா’ திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 7,601 பள்ளி வகுப்பறைகள் கட்ட கர்நாடக அரசு முடிவெடுத்திருக்கிறது. மேலும், இந்த ‘விவேகா’ திட்டத்தின் கீழ் கட்டப்படும் புதிய வகுப்பறைகளுக்கு, காவி நிற பெயின்ட் அடிக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, பள்ளி வகுப்பறைகளுக்குக் காவி நிறம் பூசுவதா என்று சில கேள்விகளும் எழுந்தன.

இந்த நிலையில், முதல்வர் பசவராஜ் பொம்மை, வகுப்பறைகளுக்குக் காவி நிறம் பூசுவதை ஆதரித்து, மறைமுகமாகக் காங்கிரஸை விமர்சித்திருக்கிறர். முன்னதாக பசவராஜ் பொம்மை, கலபுர்கி மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியொன்றில் இன்று அடிக்கல் நாட்டி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். அதன்பின்னர், பள்ளிகளுக்குக் காவி நிறம் பூசுவது குறித்து அவரிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அதற்குப் பதிலளித்த பசவராஜ் பொம்மை, “காவி நிறம் இருப்பதில் என்ன தவறு. தேசியக்கொடியின் மூவர்ணத்தில்கூட காவி நிறம் இருக்கிறது. ஏன், சுவாமி விவேகானந்தரே காவி அங்கியை அணிந்தார். கல்வியின் விரிவான வளர்ச்சியில் அவர்கள்(காங்கிரஸ்) ஆர்வம் காட்டவில்லை. எந்தவொரு முற்போக்கான மாற்றங்களைச் செய்தாலும் சர்ச்சையை உருவாக்கும் போக்கு அவர்களிடம் காணப்படுகிறது” என்று கூறினார்.
மேலும் இது குறித்துப் பேசிய கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ், “சிலருக்குக் காவி நிறத்தில் ஒவ்வாமை இருக்கிறது. அவர்களிடத்தில் நான் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். கட்சிக் கொடியில் காவி நிறம் இருக்கிறது. ஏன் அதை வைத்திருக்கிறீர்கள், நீக்குங்கள்” என்று காங்கிரஸை விமர்சித்தார்.