லண்டன்: நுண்ணறிவு திறன் எனப்படும் ஐ.க்யூ திறனில் பிரபல விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை விட 11 வயது சிறுவன் சிறப்பாக செயல்பட்டு ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளான்.
அறிவியல் மேதைகளாக கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாவ்கிங் ஆகியோரின் நுண்ணறிவு திறன் அளவீட்டு எண் 160 ஆக இருக்கும். இதனை மிஞ்சும் விதமாக இங்கிலாந்தை சேர்ந்த யூசப் ஷா என்னும் 11 வயதே ஆன சிறுவனின், ஐ.க்யூ., அளவீட்டு எண் 162 ஆக அளவிடப்பட்டுள்ளது.
யூசப் ஷா அங்குள்ள விக்டன் மூர் துவக்கப்பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறான். ஒருவரின் நுண்ணறிவு திறனை (ஐ.க்யூ லெவல்) அறிய உதவும் மென்சா டெஸ்டிற்கு யூசுப் தயாராகி வந்துள்ளான். அதோடு அவரின் உயர்கல்விக்கான தயாரிப்பிலும் யூசுப் ஈடுபட்டு வருகிறான்.
சமீபத்தில் நடந்த மென்சா டெஸ்டில் யூசபின் ஐ.க்யூ லெவல் 162 ஆக அளவிடப்பட்டுள்ளது. வரும் காலத்தில் யூசுப் கேட்பிரிட்ஜ் அல்லது ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் கணிதம் படிக்கத் திட்டமிட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மூளைக்கு வேலை கொடுக்கும் எந்த சவாலான வேலையையும் செய்ய எப்போதும் தான் விருப்பத்துடன் தயாராக இருப்பதாகவும் கூறும் யூசுப், எண்ணியல் குறுக்கெழுத்திற்கு விடை காண்பதிலும், ரூபிக் கியூபை கையாள்வதிலும் எப்போதும் தான் ஆர்வமாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இதற்கு முன்னதாக இதே இங்கிலாந்தில் கடந்த 2017ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பதினோரு வயதான அர்னவ் சர்மா என்கிற சிறுவன் மென்சா தேர்வில் 162 நுண்ணறிவு திறன் அளவீட்டு எண் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement