திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 10,850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணையில் இருந்து நேற்று (13-ம் தேதி) தண்ணீர் திறப்பது அதிகரித்துள்ளதால், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணைக்கு இன்று (14-ம் தேதி) நீர்வரத்து அதிகரித்துள்ளது. காலை 6 மணிக்கு விநாடிக்கு 5,930 கனஅடியும், பிற்பகல் 2 மணிக்கு விநாடிக்கு விநாடிக்கு 10,850 கனஅடி என நீர்வரத்து அதிகரித்துள்ளது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.50 அடியாக உள்ளன. அணையில் 6,766 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 10,650 கனஅடி மற்றும் கால்வாயில் விநாடிக்கு 200 கனஅடி என மொத்தம் விநாடிக்கு 10,850 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை நீர்வளத் துறை அதிகாரிகள் விடுத்துள்ளனர். ஆற்றில் குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லவும் மற்றும் செல்பி எடுக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
59.04 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் 54.12 அடியாக பராமரிக்கப்படுகிறது. அணைக்கு விநாடிக்கு வரும் 175 கனஅடி தண்ணீரும் செய்யாற்றில் வெளியேற்றப்படுகிறது. அணையில் 576 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. அணை பகுதியில் 1.20 மி.மீ., மழை பெய்துள்ளது.
22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 16.57 அடியாக உள்ளன. அணையில் 51.341 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. அணைக்கு விநாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 4 மி.மீ., மழை பெய்துள்ளது.
62.32 அடி உயரம் உள்ள செண்பகத் தோப்பு அணையின் நீர்மட்டம் 50.12 அடியாக அதிகரித்துள்ளன. அணைக்கு விநாடிக்கு 357 கனஅடி தண்ணீர் வருவதால், அணையில் இருந்து விநாடிக்கு 102 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் 173.326 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளன. அணை பகுதியில் 3 மி.மீ., மழை பெய்துள்ளது.
2 நாளில் 39 ஏரிகள்: திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை காட்டுப்பாட்டில் 697 ஏரிகள் உள்ளன. தொடர் மழையால் ஏரிகள் கிடுகிடுவென நிரம்பி வருகிறது. 12-ம் தேதி வரை 157 ஏரிகள் நிரம்பி இருந்த நிலையில், 13-ம் தேதி 174 ஏரிகளும், 14-ம் தேதி வரை 196 ஏரிகளும் நிரம்பி உள்ளன. 2 நாட்களில் 39 ஏரிகள் நிரம்பி உள்ளன.