மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து ஐந்து வயது சிறுமி ஒருவர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
சீர்காழியில் வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் மழை கொட்டித் தீர்த்ததால், பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில், சீர்காழி அடுத்த எருக்கூர் கிராமத்தில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி ஒருவர், மழை நீர் வடிகால் வாய்க்காலில் விழுந்து பலியாக அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராமலிங்கம் என்பவரின் ஐந்து வயது மகள் அக்ஷிதா, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், இன்று மாலை (7.30) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மழை நீர் வடிகாலில் தேங்கியிருந்த மழை நீரில் தவறி விழுந்தார்.
இதனை அடுத்து சிறுமி அக்ஷிதாவை மீட்ட அவரின் பெற்றோர்கள், சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மழை நீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து சிறுமி உயிர் இழந்த சம்பவம், அந்த பகுதிகள் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.