தேர்தல் பத்திரம் தொடர்பான வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனங்கள், சங்கங்கள் மற்றும் இந்திய குடிமக்கள் என யார் வேண்டுமானாலும் தாங்கள் விரும்பிய அரசியல் கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளிக்கும் தேர்தல் பத்திர நிதி சட்டம் 2017 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.
அரசுடமை வங்கிகளில் விற்பனை செய்யப்படும் தேர்தல் பத்திரங்களை தாங்கள் விரும்பிய தொகைக்கு விரும்பிய பணமதிப்பில் வாங்கி தாங்கள் விரும்பிய அரசியல் கட்சிக்கு நிதியளிக்கலாம்.
இந்த திட்டத்தில் நிதியளிப்பவரின் பெயர் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை என்பதால் இது அநாமதேய தேர்தல் பத்திரம் என்று விமர்சிக்கப்படுகிறது.
மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் நிதி மசோதாவாக கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை எதிர்த்து நீதி மன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த சட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை 2021 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள வங்கிகளில் தேர்தல் பத்திர விற்பனை செய்ய கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில் பாஜக அரசின் இந்த சட்டத்திற்கு புறம்பான அறிவிப்பை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் அனூப் சவுதாரி புதிய மனு ஒன்றை அளித்துள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்டு தேர்தல் பத்திரம் குறித்த வழக்கு விரைவில் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.