10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு: அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து சமுதாயத்தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. யாதவ மகாசபை மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் தலைமை வகித்தார்.

10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பைஆதரிப்பது, சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பான தமிழகஅரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்துசெய்தியாளர்களிடம் தேவநாதன் யாதவ் கூறியதாவது: தமிழக அரசின் செய்திக்குறிப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வார்த்தையை திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பயன்படுத்தலாம். ஆனால், தலைமைச் செயலர் இறையன்பு அதை கூறக்கூடாது.

தற்போது வழங்கப்பட்ட இடஒதுக்கீடு பிராமண சமூகத்தினருக்கானது என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், ஏறத்தாழ 79 சாதிகளுக்கும் சேர்த்துதான் இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதைபொதுப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, 2006, 2008-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். ரூ.8 லட்சம் வருமான வரம்பைவிமர்சிக்கின்றனர். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தபோது, படிப்படியாக உயர்த்தப்பட்ட வருமான வரம்பை திமுக அரசுவேடிக்கை பார்த்தது. இதை குறைத்தால், அரசின் கடைநிலை ஊழியர்கள் யாருமே இடஒதுக்கீடு பெற முடியாது.

வரும் 19-ம் தேதி மதுரையில் அனைத்து சமுதாயத் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும். இதையடுத்து, திருநெல்வேலியில் பேரணி நடத்தி, இடஒதுக்கீடு பற்றி மக்களிடம் விவரிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறும்போது, ‘‘மன்னர் பரம்பரையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்களிடம் நிலம், பொருள் பெற்றுவாழ்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை. எம்ஜிஆர் ஆசைப்பட்டதை, பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்’’ என்றார். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், யாதவ மகா சபை மாநில துணைத் தலைவர் ஏ.கே.சுப்பிரமணி யாதவ்,சவுத் இந்தியா பார்வர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் திருமாறன், பாஜக செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், உலகத் தமிழ் சைவப் பெருமக்கள் சங்கத் தலைவர் கே.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.