குலசேகரம்: கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. இங்கு மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து உற்பத்தியாகும் கோதையாறு அருவியாக விழுகிறது. இதனால் ஆண்டின் பெரும்பாலான நாட்களும் தண்ணீர் கொட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கிறது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னே குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் முக்கியமான அணையான பேச்சிப்பாறையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 3 வாரங்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல், மீண்டும் குமரியில் சாரல், கனமழை என பெய்து வருகிறது.
இதனால் மீண்டும் பேச்சிப்பாறை மற்றும் சிற்றார்1 அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்ததால், அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் விடுமுறை நாட்களில் வருகை தந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்தநிலையில் 18 நாட்களுக்கு பிறகு நேற்று பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது. ஆனால் சிற்றார்1 அணையில் இருந்து உபரிநீர் 300 கன அடி வீதம் திறந்த விடப்பட்டது. பேச்சிப்பாறையில் இருந்து உபரிநீர் நிறுத்தப்பட்டாலும் அருவியில் தண்ணீர் ஆர்ப்பாித்து கொட்டிய வண்ணம் இருந்தது. இந்தநிலையில் இன்று காலை தண்ணீர் வரத்து சற்று குறைந்தது.
இதையடுத்து திற்பரப்பு அருவியில் அதிகமாக தண்ணீர் விழும் கீழ் பகுதியை தவீர்த்து, மற்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீக்கப்பட்டது. மழை காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைவாக இருந்தது. உள்ளூர் சுற்றுலா பயணிகள் வருகை காணப்பட்டது. மேலும் இன்று காலை திற்பரப்பில் குளிர் பிரசேதங்களை நினைவூட்டம் வகையில், மேக மூட்டத்துடன் பனிபடர்ந்து குளிர்ச்சியான ரம்மியமான சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.