இடியாப்பச் சிக்கலில் `வாரிசு’ : `கர்மா இஸ் பூமராங்’ என்ற நிலையில் தயாரிப்பாளர் தில்ராஜூ!

விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.

வம்சி இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘வாரிசு’. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகிபாபு, குஷ்பு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமன் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில்ராஜூ தயாரிக்கிறார். இத்திரைப்படம் வருகின்ற பொங்கலன்று ஒரே நேரத்தில் தமிழில் வாரிசு என்ற பெயரிலும், தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரிலும் வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது. ரிலீசுக்கு முன்பே தொலைக்காட்சி, ஓடிடி உரிமை உள்ளிட்டவை சுமார் ரூ.300 கோடி அளவில் விற்பனையானதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இந்நிலையில் இத்திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில், தயாரிப்பாளர் தில்ராஜூ-வினாலேயே சிக்கல் எழுந்துள்ளது.

image

அதன்படி தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சில தினங்களுக்கு முன் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி நடைபெற்ற தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில், சங்கராந்தி (பொங்கல்), தசரா (விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2019ஆம் ஆண்டு, “பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்; மீதமிருக்கும் திரையரங்குகளையே தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டும்” என பிரபல தயாரிப்பாளரான தில்ராஜு  ஊடகங்களிடம் தெரிவித்ததும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிக்கலின் பின்னணி…

கடந்த 2019-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படம், ஜனவரி 10-ம் தேதி தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படவிருந்தது. அப்போது தெலுங்கில் அதே சமயத்தில் பாலகிருஷ்ணாவின் என்டிஆர் கதாநாயகுடு, ராம்சரணின் வினய விதேய ராமா, வருண் தேஜாவின் F2 ஆகிய நேரடி திரைப்படங்கள் வெளியாகவிருந்தன.

image

இதனையடுத்து நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு முன்னுரிமை என்பதை சுட்டிக்காட்டி, பேட்ட திரைப்படத்துக்கு மிகக் குறைந்த அளவிலான திரையரங்கங்களே ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால் கோபமடைந்த பேட்ட திரைப்படத்தின் தெலுங்கு வினியோகஸ்தர் அசோக், பிரபல தயாரிப்பாளர் தில்ராஜூ உள்ளிட்டோரை ‘தியேட்டர் மாபியா’ எனும் கடுமையான சொற்களால் வறுத்தெடுத்தார். மேலும் இந்த விவகாரத்தில் தெலங்கானா முதலமைச்சர் கே சந்திரசேகர ராவ், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் பின்னர் தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய தில் ராஜூ, “அசோக் எங்களைப் பற்றி தரம் குறைந்த வார்த்தைகளை கூறிவருகிறார். என்னால் அவரைப் போல பேச முடியாது. நான் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் எங்கள் சொந்த திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் வேண்டும்” என தெரிவித்தார்.

இந்நிலையிலேயே தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நேரடி திரைப்படங்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ‘வாரிசு’ திரைப்படம் தெலுங்கில் டப் செய்து வெளியாவதால் குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் அதே தினத்தில் பாலகிருஷ்ணாவின் ‘வீர நரசிம்ம ரெட்டி’, சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாவதால், வாரிசு படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

image

ஒரே நேரத்தில் வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருந்த நிலையில் எழுந்துள்ள இந்த சிக்கல் விஜய் ரசிகர்களை கலக்கமடையச் செய்துள்ளது. டோலிவுட்டில் வெற்றி நாயகனாக காலூன்ற நினைக்கும் விஜய்க்கும் இந்த விவகாரம் பின்னடைவு பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில் பிற டப்பிங் படங்கள் வெளியாவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தில் ராஜூ, தற்போது தனது தயாரிப்பில் வெளியாகும் வாரிசு திரைப்படத்தின் சிக்கலால் இருதலைக் கொல்லி எறும்பின் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பட வசூல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு திரைப்பட தேதி தள்ளி வைக்கப்படுமா அல்லது பொங்கலன்றே தெலுங்கில் வெளியாகி வெற்றியை ருசிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

-ராஜேஷ் கண்ணன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.