மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை – மதமாற்றம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! உச்சநீதிமன்றம் கருத்து.

டெல்லி: கட்டாய மதமாற்றம் ஒரு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல், கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது, கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை என உச்சநீதிமன்றம்கருத்து தெரிவித்து உள்ளது.

“தேசிய பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் மதம் மற்றும் மனசாட்சியின் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை” அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

மூட நம்பிக்கை, கட்டாய மதமாற்றம் மற்றும் மாந்தீரக செயல்கள் ஆகியவற்றை மத்திய அரசும் மாநில அரசுகளும் தடுத்து நிறுத்த உத்தரவிடக்கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், இந்தியாவில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் அளித்து கட்டாய மதமாற்றம் செய்வதாகவும்,  கட்டாய மதமாற்றம், மாந்தீரிக செயல்கள் ஆகியவை நாடு முழுவதும் நடைபெறுவதாக மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மோசடியான வகையில் மேற்கொள்ளப்படும் மத மாற்றங்களைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும்,

கட்டாய மதமாற்றம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியிலேயே அதிகம் நடப்பதாகவும், இது அரசியல் சட்டப்பிரிவுகள் 14, 21, 25 ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, மதசார்பின்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்றும் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் ஷா, ஹிமா கோலி அமர்வில் நடைபெற்றது. அப்போது, கட்டாய மத மாற்ற நடைமுறையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விவரிக்குமாறு, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை கேட்டுக் கொண்டது. மேலும், “இது மிகவும் தீவிரமான விஷயம். கட்டாய மதமாற்றங் களைத் தடுக்க, மத்திய அரசு நேர்மையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மிகவும் கடினமான சூழ்நிலையை எதிர் கொள்ள வேண்டி வரும். நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கிறீர்கள் என்று விவரிக்க வேண்டும், நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது” என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிப்பதாக கூறிய நீதிபதிகள், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விசாரணையின்போது ,மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு தனிச்சட்டம் உள்ளதாக தெரிவித்தார். ஓடிஷா மற்றும் மத்திய பிரதேசத்தில், அரிசி மற்றும் கோதுமை பொருட்களை கொடுத்து மதமாற்றம் செய்வதாகவும்,  பல இடங்களில்  கட்டாய மதமாற்றம் நடைபெறுவதை மத்திய அரசு ஒப்புக்கொள்வதாக கூறினர். .

இதையடுத்து கருத்துதெரிவித்த நீதிபதிகள்,  தனி நபருக்கு மதசுதந்திரம் இருக்கலாம், ஆனால் கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை என்றும் கூறினர்மத்திய அரசு 22- ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.