வழக்கறிஞர் மீது தாக்குதல்: டிஜிபி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

நெல்லை மாவட்டம், மாறன்குளத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராஜரத்தினம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், மனித உரிமை தொடர்பான வழக்குகள், கூடன்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடியவர்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என்று காவல்துறைக்கு எதிரான பல வழக்குகளை தான் நீதிமன்றத்தில் நடத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம்தேதி இரவில் தனது வீட்டுக்கு வந்த காவல்துறையினர் தன்னை அடித்து இழுத்து சென்றதாகவும், பின்னர் காவல் நிலையத்தில் வைத்து நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். இது குறித்து மாவட்ட நீதிமன்றத்தில் புகார் அளித்தவுடன் எந்த விதமான வழக்கும் பதிவு செய்யாமல் விடுவித்தாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும், அப்போதைய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார், துணை காவல் கண்காணிப்பாளர், பணக்குடி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

வழக்கு நிலுவையில் இருக்கும்போதே ராஜரத்தினம் இறந்து விட்டதால் வழக்கை அவரது மனைவி சரோஜா நடத்தி வந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணிம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியதாகவும், குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்து விட்டதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் கைது நடவடிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை மீறிய காவல்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கு தொடரப்பட்டு ஐந்து ஆண்டுகளாகியும், காவல்துறை மீது துறை ரீதியான நடவடிக்கை கூட எடுக்கவில்லை, எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யாமல், வழக்கறிஞரை பிடித்துச் சென்று அடித்து துன்புறுத்தியுள்ளதாக உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

குற்ற வழக்கில் தொடர்புடையவர் கைது செய்யப்படும் போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுகளை முறையாக பின்பற்றவில்லை. எனவே இந்த வழக்கில் டி.ஜி.பி., அப்போதைய நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், உள்ளிட்ட 10 அதிகரிகளுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுப்பதாகவும், இந்த வழக்கில் டி.ஜி.பி., உள்ளிட்டோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணை டிசம்பர் மாதம் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.