கராச்சி,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் இந்தியா மிக கண்ணியம் வாய்ந்த உறவை கொண்டுள்ளது.
இதுபோன்ற அமெரிக்காவின் கண்ணியமிக்க உறவு பாகிஸ்தான் நாட்டுடனும் இருக்க வேண்டும் என அடிப்படையிலேயே நான் விரும்புகிறேன் என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்கா பிரதமர் பதவியில் இருந்து தன்னை வெளியேற்ற திட்டமிட்டது என ஒரு சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் கான் கூறிய நிலையில், அவர் தற்போது இதனை கூறியுள்ளார்.
உக்ரைனுடனான போரின்போதும், ரஷிய எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. இந்த சூழலில், தனது மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, இறக்குமதி செய்யாமல் இருக்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா பதில் கூறுகிறது.
அமெரிக்காவுடன் பாகிஸ்தானும் நட்புறவுடன் இருக்க விரும்புகிறது. ஆனால், பாகிஸ்தானும் முடியாது என கூற கூடிய தருணங்கள் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் நிதி மந்திரி இஷாக் தார், சமீபத்தில் துபாயில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, பாகிஸ்தானில் எரிபொருள் நெருக்கடியான சூழல் தற்போது காணப்படுகிறது.
அதனால், ரஷியாவிடம் இருந்து குறைவான விலையில் ரஷிய எண்ணெயை வாங்கும் தனது விருப்பத்தினை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முன்பே ரஷியாவிடம் தெரிவித்து விட்டது.
ரஷிய எண்ணெய்யை நாங்கள் வாங்குவது பற்றி அமெரிக்க அதிகாரிகளிடம் முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. அதனால், அமெரிக்கா அதனை தடுக்க முடியாது. ஏனெனில், பாகிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவும், ரஷிய எண்ணெய்யை வாங்குகிறது.
அதன்படி, எங்களது அமைச்சகமும் ரஷிய எண்ணெய்யை வாங்கும். அதற்கான முக்கிய நடவடிக்கைகளை வருகிற மாதங்களில் அரசு மேற்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடனும் பாகிஸ்தான் நிதி சார்ந்த வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.