சிம்லா: இமாச்சல பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த 12-ம் தேதி தேர்தல் ஒரேகட்டமாக நடைபெற்றது. டிசம்பர் 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்நிலையில், மாநிலத்தில் அமைக்கப்பட்ட தாஷிகேங் வாக்குச்சாவடியில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தாஷிகேங் பகுதியானது, உலகிலேயே மிகவும் உயரத்தில் அமைந்த பகுதியாகும். இந்த வாக்குச்சாவடியை மாதிரி வாக்குச்சாவடியாக தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்து ஏற்பாடுகளைச் செய்தது. அங்கு வரும் வாக்காளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. மேளமிசைத்தும், பாடல்கள் பாடியும் வாக்காளர்களை இசைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.
சுமார் 15,256 அடி உயரத்தில் இந்த வாக்குச்சாவடி அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 52 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 30 பேர் ஆண்கள், 22 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.