குஜராத் தேர்தல்: வெடித்த கலகம்… பாஜக-விலிருந்து விலகும் எம்.எல்.ஏ-க்கள் – பின்னணி என்ன?!

பா.ஜ.க, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி நிலவுவதால் சூடுபிடித்திருக்கிறது குஜராத் தேர்தல் களம். டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்யும் பா.ஜ.க-வை எதிர்த்து ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், பா.ஜ.க-வில் உட்கட்சிப்பூசல்கள் வெடித்திருப்பது, அந்தக் கட்சிக்கு மேலும் தலைவலியாக அமைந்திருக்கிறது.

மறுக்கப்பட்ட வாய்ப்பு!

182 தொகுதிகள் கொண்ட குஜராத்தில், இதுவரை 166 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது பா.ஜ.க. கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா, காங்கிரஸிலிருந்து பா.ஜ.க-வுக்கு தாவிய ஹர்திக் படேல் உள்ளிட்ட புதுமுகங்களுக்கு சீட் வழங்கியிருக்கிறது பா.ஜ.க. காங்கிரஸிலிருந்து தாவிய ஏராளமானோருக்கு பா.ஜ.க-வில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது கட்சிக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஐந்து அமைச்சர்கள் உள்பட 38 எம்.எல்.ஏ-க்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாதது பா.ஜ.க-வினரிடம் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. தற்போதைய சபாநாயகர் நிமாபென் ஆச்சார்யாவுக்கும் (Nimaben Acharya) தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அமைச்சர்களில், பிரிஜேஷ் மெர்ஜா, ராஜேந்திர திரிவேதி, பிரதீப் பார்மர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

விஜய் ரூபானி

முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பா.ஜ.க எம்.எல்.ஏ-வுமான விஜய் ரூபானிக்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை. “நான் போட்டியிட வாய்ப்புக் கோரவே இல்லை. ஐந்து ஆண்டுகள் முதலமைச்சராகப் பணியாற்ற எனக்குக் கட்சி வாய்ப்பளித்தது. இப்போது என்னைப் பஞ்சாப் பா.ஜ.க-வுக்கு பொறுப்பாளர்களாக நியமித்திருக்கின்றனர்” என்று கூறியிருக்கிறார் விஜய் ரூபானி.

சுயேச்சையாகப் போட்டி!

இந்தச் சூழலில், குஜராத் பா.ஜ.க-வின் முக்கியத் தலைவர்கள் சிலர் கட்சியிலிருந்து விலகி சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகியும், குஜராத் பா.ஜ.க-வின் பழங்குடியினப் பிரிவின் தலைவருமான ஹர்ஷத் வாசவாவுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகி அவர், நந்தோத் (Nandod) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார். இதேபோல, பா.ஜ.க எம்.எல்.ஏ-க்களான தினேஷ் படேல், சதீஷ் படேல் ஆகியோரும் கட்சியிலிருந்து விலகி, சுயேச்சையாகப் போட்டியிடவிருக்கின்றனர்.

குஜராத் தேர்தல் – மோடி

வஹோதியா (Waghodia) தொகுதியில் ஆறு முறை எம்.எல்.ஏ-வாக இருந்த மதுபாய் ஶ்ரீவஸ்தவுக்கும் இந்தத் தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் கட்சியிலிருந்து விலகியவர், “1995-ல் சுயேச்சையாக நின்று பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றேன். அப்போது மோடியும் அமித் ஷாவும் என்னை பா.ஜ.க-வில் இணையுமாறு கேட்டுக்கொண்டதால்தான், கட்சியில் இணைந்தேன். தற்போது பா.ஜ.கமீது கடுங் கோபத்திலிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு எம்.எல்.ஏ-வான கேசரி சொலான்கி என்பவர் தனக்கு சீட் வழங்காததால், கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்துவிட்டார். இந்த நிலையில், அதிருப்தியிலிருப்பவர்களைச் சமாதானப்படுத்த மத்திய இணையமைச்சர் ஹர்ஷ் சங்கவியை குஜராத்துக்கு அனுப்பியிருக்கிறது பா.ஜ.க மேலிடம். ஆனால், அவரைப் பார்ப்பதையே பல அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் தவிர்த்துவருவதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

சீட் வழங்கப்படாதது ஏன்?

“கால் நூற்றாண்டுக்கு மேலாக ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க அரசுமீது ஒரு சில விஷயங்களில் குஜராத் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவருவதாக சொல்லப்படுகிறது. அந்த அதிருப்தியைச் சமாளிக்கவே பல தொகுதிகளில் பழைய ஆட்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் வலுவாக இருக்கும் இடங்களில், அந்தக் கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் சிலர், பா.ஜ.க-வை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடுவதால், அந்தக் கட்சியின் வாக்குவங்கி சிதறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன” என்கின்றனர் குஜராத் அரசியலைக் கூர்ந்து நோக்குபவர்கள்.

பாஜக தலைமை

பா.ஜ.க, முக்கியத் தலைவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்காதது எதிர்வரும் தேர்தலில் அவர்களுக்குப் பாதிப்பை உண்டாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.