ஜலந்தர் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸிலிலிருந்து அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ரயில் நிலையத்தில் இன்று காலை 7 மணியளவில் சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்திருக்கிறது. அதுகுறித்து ரயில்வே ஊழியர் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் சூட்கேஸை திறந்து பார்த்ததில் அதற்குள் 30 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் இருப்பதை கண்டறிந்தனர். ஆனால் அந்த நபர் யார் என்பதை போலீசார் இதுவரை அடையாளம் காணவில்லை. அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில், ஒரு நபர் சூட்கேஸை ரயில் நிலையத்தில் விட்டுச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அரசு ரயில்வே போலீஸ் உதவி கமிஷனர், ஓம் பிரகாஷ் கூறுகையில், தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று தகவல்களை சேகரித்து வருகின்றனர். திங்கட்கிழமை இரவிலிருந்தே சூட்கேஸ் அந்த இடத்தில் இருந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
கிடைத்துள்ள சிசிடிவி ஆதாரங்களை வைத்து போலீசார் அந்த நபர் யார், கொலை செய்யப்பட்ட நபர் யார்? குற்றத்தின் பிண்ணனி என்ன என்பது குறித்து பல கோணங்களில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
