'பிரதமர் மோடியாக மாற மு.க.ஸ்டாலினுக்கு ஆசை' – அண்ணாமலை கலாய்..!

“பிரதமர் நரேந்திர மோடியாக மாற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆசை” என, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழக அரசின் மின்சாரக் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கலைவாணி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சி மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டார்.

ஆர்ப்பாட்டத்தில், கே.அண்ணாமலை பேசியதாவது:

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு போட்டி போட்டு விலையை உயர்த்தி வருகின்றனர். மத்திய அரசு விலையை குறைத்தாலும் விலையை குறைக்காத ஒரே மாநிலம் தமிழகம் தான். தமிழகத்தில் கனிமவள கொள்ளை திருட்டு அதிகரித்து வருகிறது. 16 மாதங்களில் இந்த ஆட்சி செய்த ஒரே சாதனை விலை உயர்வு தான்.

இந்தியாவில் தமிழக முதல்வர் போல் விளம்பர முதல்வர் யாருமில்லை. முதல்வருக்கு விளம்பரமோனியா நோய் வந்துள்ளது. சென்னை மக்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் முதலமைச்சர் குடும்பத்துடன் “லவ் டுடே” படத்தை பார்க்கிறார். தமிழகத்தில் வெளியாகவுள்ள அனைத்து படங்களையும் ஓடி ஓடி வாங்குகிறார்கள்.

பாஜக செலவில், தமிழக அமைச்சர் குஜராத் அமுல் நிறுவனத்தை பார்வையிட்டு எப்படி லாபம் ஈட்டுகிறார்கள் என தெரிந்து கொள்ளட்டும். அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவீதம் விவசாயிகளை சென்றடைகிறது. ஆனால் ஆவின் நிறுவனம் இப்படி செய்யவில்லை. அதனால் ஆவின் நஷ்டத்தில் செல்கிறது. பால் உற்பத்தியில் வரும் லாபம் விவசாயிகளை சென்றடைய வேண்டும்.

முதலமைச்சருக்கு எப்படியாவது பிரதமர் நரேந்திர மோடியாக மாறி விட வேண்டும் என ஆசை ஏற்பட்டு உள்ளது. மோடியாக மாற வேண்டும் என்றால் குடும்ப உறுப்பினர்களை யாரையும் அருகில் விடக் கூடாது. கை சுத்தமாக இருக்க வேண்டும். அதற்கு ஒரு தகுதி, திறமை, கடவுள் அருள் வேண்டும். தமிழகம் மீது பெரிய நம்பிக்கை வைத்துள்ளோம். ஒவ்வொருவரும் பிரதமர் மோடியாக தன்னை உணர்ந்து பணியாற்றினால் நிச்சயம் வெற்றி நம் பக்கம். நேரம் வந்து விட்டது, தமிழகத்தில் மாற்றம் வரப் போகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.