குஜராத் தேர்தல் களம் | கடத்தப்பட்டாரா ஆம் ஆத்மி வேட்பாளர்? – திடீர் வாபஸ் எழுப்பும் கேள்விகள்

அகமதாபாத்: குஜராத் மாநில சூரத் கிழக்கு தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் கடத்தப்பட்டு, பின்னர் மிரட்டப்பட்டு தனது வேட்புமனுவை வாபஸ் பெறவைக்கப்பட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டமாக வரும் டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு டிசம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு கடும் சவால் விடுக்கும் நோக்கில் ஆம் ஆத்மி களமிறங்கியுள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் சூரத் (கிழக்கு) தொகுதி வேட்பாளர் கடத்தப்பட்டதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

ஆம் ஆத்மி கட்சியின் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலா திடீரென மாயமானார். நேற்று மாலை அவர் கடத்தப்பட்டதாக வழக்கு பதிவானது. அவர் போலீஸார் புடைசூழ தேர்தல் அலுவலகத்திற்கு வந்து மனுவை வாபஸ் வாங்கியது தெரியவந்தது. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட ஆம் ஆத்மி தேசிய செய்தித் தொடர்பாளர் ராகவ் சத்தவ், “இந்த வீடியோவைப் பாருங்கள். காணாமல் போன எங்கள் வேட்பாளர். அடையாளம் தெரியாத நபர்கள் புடைசூழ, போலீஸ் பாதுகாப்புடன் வந்து மனுவை வாபஸ் பெறுகிறார். இது பாஜகவின் சதி. சுற்றியிருப்பவர்கள் பாஜகவினர் தான். அவர்களுக்கு போலீஸ் ஆதரவு வேறு. நேர்மையான சுதந்திரமான தேர்தல் என்பதெல்லாம் வெறும் பகடியாகிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

குஜராத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில், முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நவம்பர் 5 முதல் நவம்பர் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில்தான் ஆம் ஆத்மி வேட்பாளர் ஒருவர் மனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

குஜராத் சட்டப்பேரவையில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 99 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், பாரதிய ட்ரைபல் பார்ட்டி 2 இடங்களிலும் வென்றன. சுயேச்சைகள் 2 இடங்களைக் கைப்பற்றினர். இந்தத் தேர்தலில் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறும் நிலையில், 2002 ஆம் ஆண்டு தேர்தலில் படைத்த வெற்றி போல் 127 இடங்களைக் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மணிஷ் குற்றச்சாட்டு: இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு வேட்பாளர் கடத்தப்பட்டிருக்கிறார். அவர் துப்பாக்கி முனையில் போட்டியிலிருந்து வாபஸ் பெறச் செய்யப்பட்டுள்ளார். இதைவிட தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய நெருக்கடி ஏதும் வேண்டுமா என்ன? இதனால் தான் நாங்கள் தேர்தலை ஆணையத்தை உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நாடியுள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிசோடியா அளித்த ஒரு பேட்டியில், “500 போலீஸார் பாதுகாப்புடன் எங்கள் வேட்பாளர் அழைத்துவரப்பட்டுள்ளார். அவரை மிரட்டி மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். இது ஜனநாயகத்தின் மீது வெளிப்படையான மிரட்டல் என்பதை நான் தேர்தல் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.