குமரி எஸ்எஸ்ஐ கொலையில் கைதான தீவிரவாதிகள் 2 பேர் சேலம் சிறையில் மோதல்: அதிகாரிகள் விசாரணை

சேலம்: கன்னியாகுமரியில் சிறப்பு எஸ்.ஐ.யை சுட்டுக்கொலை செய்த வழக்கில் கைதான தீவிரவாதிகள் 2 பேர் சேலம் சிறையில் மோதலில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 2020 ஜனவரி 8ம்தேதி  சிறப்பு எஸ்.ஐ. வில்சன் பணியில் இருந்தார். அப்போது அவரை 2 பேர் துப்பாக்கியால் சுட்டும், தாக்கியும் கொலை செய்துவிட்டு தப்பினர். அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, கொலையாளிகள் தப்பி சென்றது தெரியவந்தது. அதனை வைத்து அப்துல்சமீம், தவுபிக் ஆகியோரை போலீசார் கர்நாடகாவில் கைது செய்தனர். இவர்கள் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான இவர்கள் மீது உபா சட்டமும் பாய்ந்தது. இவர்கள் இருவரும் சேலம் மத்திய சிறையில் உயர்பாதுகாப்பு தொகுதியில் தனித்தனியாக அடைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வாக்கி டாக்கி சத்தம் கேட்டுள்ளது. தனக்கு தூக்கம் கெடுவதாக கூறி சிறையின் கதவு கம்பியை தீவிரவாதி ஒருவர் தட்டியுள்ளார். அங்கு வந்த வார்டனிடம் சத்தத்தை குறைவாக வையுங்கள் என கூறியுள்ளார்.

எதிர்அறையில் இருந்த இன்னொரு தீவிரவாதி, கம்பியை தட்டுவதால் எனக்கு தூக்கம் கெடுகிறது என கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் அறை திறக்கப்பட்டவுடன் இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது மீண்டும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், முடியை பிடித்து ஒருவருக்கொருவர் இழுத்துக்கொண்டனர். அங்கு ஓடிவந்த வார்டன்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.

 இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் தமிழ்செல்வனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இருவரையும் அழைத்து கடும் எச்சரிக்கை செய்தார். சிறையில் தீவிரவாதிகளுக்கிடையே நடந்த மோதல்  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.