புதுடெல்லி: மாநகராட்சி தேர்தலில் போட்டியிட கட்சி தொண்டரிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆம் ஆத்மி எம் எல் ஏவின் உறவினர் மற்றும் உதவியாளர்கள் 2 பேரை லஞ்ச ஒழிப்புதுறை கைது செய்துள்ளது. டெல்லியில் 2014 ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினராக இருந்து வருபவர் கோபால் காரி. இவர் லஞ்ச ஒழிப்பு துறையில் ஒரு புகார் மனுவை கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்தார். அதில் கமலா நகரில் உள்ள வார்டு எண் 69ல் போட்டியிட எனது மனைவிக்கு சீட் பெற்றுத் தருமாறு மாடல் டவுன் சட்டமன்ற உறுப்பினர் அகிலேஷ்பதி திரிபாதியை சந்தித்து கோரிக்கை வைத்தேன். அதற்காக அவர் ரூ. 90 லட்சம் லஞ்சம் கேட்டார்.
இதையடுத்து சீட் பெறுவதற்காக திரிபாதியிடம் ரூ. 35 லட்சத்தையும், இன்னொரு ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜேஷ் குப்தாவிடம் 20 லட்சம் ரூபாயையும் கொடுத்தேன். வார்டு கவுன்சிலர் சீட் கிடைத்தவுடன் மீதி பணத்தை கொடுக்க வேண்டும் என்று திரிபாதி கூறினார். ஆனால் எனது மனைவிக்கு கட்சி சார்பில் போட்டியிட சீட் வழங்கபடவில்லை. வேறு ஒரு நபர் பெயர் வேட்பாளர் பட்டியில் இடம் பெற்று இருந்தது. இதனால் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது திரிபாதியின் உறவினர் அடுத்த தேர்தலில் சீட் தருவதாக கூறினார். ஆனால் நான் எனது பணத்தை திருப்பி கேட்டேன்.
இதையடுத்து எனது பணத்தை திருப்பி தந்துவிடுவதாக அகிலேஷ்பதி திரிபாதியின் மைத்துனர் ஓம்சிங் தெரிவித்தார் என்று புகார் மனுவில் கூறியிருந்தார். இந்தநிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு அகிலேஷ்பதி திரிபாதியின் மைத்துனர் ஓம்சிங் மற்றும் எம்எல்ஏவின் உதவியாளர்கள் சிவசங்கர் பாண்டே, பிரின்ஸ் ரகுவன்சி ஆகிய 3 பேரும் பணத்தை திருப்பி கொடுக்க கோபால் காரியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எம் எல் ஏவின் மைத்துனர் ஓம்சிங் மற்றும் அவரது உதவியாளர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் டெல்லி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.