சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துச்சாமி நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.
அந்த பகுதியில் சுமார் 450 கோடி செலவில் கட்டப்பட்டு வருகின்ற அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் வணிக வளாகத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் சு.முத்துச்சாமி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ரூபாய் 214 கோடி செலவில் 11 தளங்கள் உள்ள வணிக வளாகம் மற்றும் 304 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளை வீட்டு வசதி வாரியம் சார்பில் முதலமைச்சரின் ஆணைப்படி ஆய்வு செய்து வந்துள்ளோம். அத்துடன் நந்தனம் பிரேம் காலணி மற்றும் ஷெனாய் நகர் பகுதிகளில் 558.86 கோடி செலவில் நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 8000 வீடுகள் விற்கப்படாமல் உள்ள நிலையில், அவைகளை விற்க முயற்சி செய்து வருகின்றோம். இல்லையெனில் வாடகை வீடாக மாற்ற இருக்கிறோம். மதுரை, கோயமுத்தூர், ஈரோடு,தோப்பூர் என 16 மாவட்டங்களில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளின் அபராத தொகை செலுத்தாத நபர்களுக்கு 53 கோடி ரூபாய் அபராத வட்டி தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதனை தொடர்ந்து, அரும்பாக்கம் பகுதியில் தற்போது நடைபெற்று வரும், இந்த பணிகள் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 17ஆம் தேதி முடிக்கப்படும். மேலும், ஒப்படைக்கப்படும் போது விலை நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.