சென்னை: காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும் போற்றும் வகையில் நடைபெறுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
உத்திரப் பிரதேசம் மாநிலம் காசியில் நடைபெறும் காசி – தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகத்திலிருந்து புறப்படும் முதல் குழுவின் ரயிலை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “தமிழகத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கலாச்சார நிகழ்ச்சிகள் அங்கு நடக்க உள்ளது. பண்பாடு, இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவை பற்றி கலை நிகழ்ச்சிகள் தினம்தோறும் நடைபெற உள்ளது.
தமிழக கலாச்சாரத்தை மேம்படுத்தும் விதமாக ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற நிகழ்ச்சியின் மூலமாக தமிழகத்தில் இருந்து 270-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 19-ம் தேதி அன்று வாரணாசியில் பிரதமர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எந்த ஓர் அரசியல் விமர்சனமும் கிடையாது. இது முழுமையாக தமிழகத்தின் கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும், பண்பாட்டையும் போற்றும் விதமாக நடைபெறுகிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்து காசிக்கும், நமக்கும் தொடர்பு உள்ளது. உன்னதமான தமிழ் கலாச்சாரத்தை போற்றும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது” என்றார்.