காசிக்கும், தமிழகத்துக்கும் இடையே தொன்மையான நாகரிக பிணைப்பையும் பல நூற்றாண்டு கால அறிவுப் பிணைப்பையும் மீட்டுருவாக்கம் செய்வதற்காக, ஒருமாத கால ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சி, வாரணாசியில் இன்று (நவம்பர் -17) தொடங்கி டிசம்பர் 16 வரை நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, காசி – தமிழகம் இடையேயான தொடர்புகளை வெளிக்கொணர்வதை நோக்கமாகக் கொண்டு, சென்னை ஐஐடி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் சார்பில், அறிஞர்கள் இடையே கல்விசார் பரிமாற்றங்கள், கருத்தரங்குகள், விவாதங்கள், கலை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இரு பிராந்திய மக்களிடையே உறவை ஆழப்படுத்துவது இதன் பரந்த நோக்கம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதிநிதிகள் பங்கேற்க வசதியாக, தமிழகத்திலிருந்து காசிக்கு 13 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில்களில் தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் பயணம் செய்ய உள்ளனர். அதன்படி முதல் குழு இன்று ரயில் மூலம் வாரணாசி புறப்பட்டுச் செல்கிறது. 216 பேர் அடங்கியுள்ள இந்த குழுவில் 35 பேர் ராமேஸ்வரத்திலிருந்தும், 103 பேர் திருச்சியிலிருந்தும், 78 பேர் சென்னை எழும்பூரிலிருந்தும் இன்று பயணம் மேற்கொள்கின்றனர். சென்னை எழும்பூரிலிருக்கு ரயில் வந்த போது, அதில் பயணிக்கும் பிரதிநிதிகளுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நல்லி குப்புசாமி செட்டியார், ஆற்காடு நவாபின் பேரன் ஆசிப், தென்னக ரயில்வே மேலாளர் மல்லையா மற்றும் பா.ஜ.க தமிழக நிர்வாகிகள் கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர்.
இதற்கு முன் ராமேஸ்வரத்திலிருந்து வாரணாசி செல்லும் ரயிலைத் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார். பின்னர் அந்த ரயிலில் வந்த மாணவர்கள் உள்ளிட்ட 35 பேர் அடங்கிய குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபடியே சென்னையில் வந்திறங்கினார். அவருடன் வந்த பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இதே ரயிலில் காசி செல்கிறார்.

இந்த நிகழ்வு முடிந்து ஆளுநர் சென்றபின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் பா.ஜ.க நிர்வாகிகள் சிலருடன் ரயில் நிலையத்திலிருந்த ஓய்வு அறையில் அரை மணி நேரத்துக்கு மேலாக ஆலோசனையில் ஈட்டுப்பட்டிருந்தனர். இது குறித்து சில நிர்வாகிகளிடம் நாம் பேச்சுக் கொடுத்தோம், “காசி தமிழ்ச் சங்கமம் பிரதமரின் கனவுத் திட்டம். இதை சரியான முறையில் தமிழக பா.ஜ.க நடத்திக் காட்ட வேண்டும். அதனால் இதன் ஒருங்கிணைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. மேலும் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று சென்றிருப்பவர்களைக் காசிக்கு வந்து சேரும்போது அவர்களை அங்கு வரவேற்கவும் திட்டமிடப்பட்டது. அதன்படி அவரும் காசி செல்கிறார். அதோடு மாநில கலாசார அணி பிரிவு தலைவர்களுடன் காசியில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்தும் சில ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது” என்றார்கள்.

`இதோடு நடப்பு தமிழக அரசியலும் பேசப்பட்டது’ என்கிறார்கள் இன்னும் சில நிர்வாகிகள். இது குறித்து மேலும் தொடர்ந்தவர்கள், “’பிரதமர் மோடியோ, அமித் ஷாவோ சென்னை வரும் போதெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை’ என்று எடப்பாடி பேசிய விவகாரமும் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, எடப்பாடி அமித் ஷா-வை சந்திக்கும் லிஸ்ட்டிலேயே இல்லை. அதனால் அவரை அழைக்கவும் இல்லை. ஆனால், இப்போது கூட்டணிக்கு எதிராக சில விஷயங்கள் பேசி வருகிறார் எடப்பாடி. அமித் ஷா சென்னை வந்திருந்த போது ‘கூட்டணி குறித்தெல்லாம் நான் பார்த்து கொள்கிறேன். கட்சி வளர்ச்சி பற்றி மட்டும் நீங்கள் பாருங்கள்’ என்று சொல்லி சென்றிருக்கிறார். எனவே எடப்பாடி தரப்பில் பேசுவதற்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல், நம் கட்சியை வளர்ப்பதற்கான வேலையில் ஆக்கப்பூர்வமாக கவனம் செலுத்துவோம் என்றும் பேசப்பட்டதாக” சொல்கிறார்கள் ஆலோசனையில் பங்கேற்ற நிர்வாகிகள் சிலர்.
காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்வு இன்று தொடங்கிய நிலையில், உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்து தமிழில் ட்வீட் செய்துள்ளார். அதில், “காசியாக இருந்தாலும் சரி, தமிழகமாக இருந்தாலும் சரி, நமது கலாசாரம், ஆன்மீகம் மற்றும் தத்துவ மரபு ஒன்றுதான். ‘காசி தமிழ் சங்கமம்’ ஆனது இந்த ‘ஒன்றுபட்ட நிலை’யின் புனிதமான மற்றும் வளமான உணர்வை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான ஊடகம்.

அன்பென்ற உணர்வு இழைகளினால் இந்தியா முழுவதையும் பிணைத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு அன்பான வரவேற்பு. பாபா விஸ்வநாதரின் புண்ணிய ஸ்தலத்தில் ‘காசி-தமிழ்ச் சங்கமம்’ விழாவிற்கு வரும் அனைத்து விருந்தினர்களுக்கும்/பிரமுகர்களுக்கும் அன்பான வரவேற்பு. இந்த விழா மரியாதைக்குரிய பிரதமரின் ‘ஏக் பாரத்-ஷ்ரேஷ்டா பாரத்’ உறுதிமொழிக்கு புதிய பரிமாணத்தை சேர்க்கும்.இந்த நிகழ்வு இந்தியாவின் கலாசார நாகரிகத்தில் ‘ராம சேது’ போலவே இருக்கும்” என்று அவர் தனது ட்வீட் செய்தியில் தெரிவித்துள்ளார்.