“பிரதமர் மோடியின் இதயம் தமிழ்நாட்டிற்காக துடிக்கிறது” – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

“பிரதமர் மோடியின் இதயம் தமிழ்நாட்டிற்காக துடித்து கொண்டிருக்கிறது. அதற்காகவே காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என கும்பகோணம் ரயில் நிலையத்தில் பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

கும்பகோணம் ரயில் நிலையத்தில் அண்ணாமலை

சுதந்திர அமிர்த பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக காசி தமிழ் சங்கமம்-2022 நிகழ்ச்சி காசியில் நடக்கிறது. இதன் மூலம் காசிக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொன்மையான நாகரீக தொடர்பு மீண்டும் புதுப்பிக்க கூடிய வகையில் டிசம்பர் 16-ம் தேதி வரை ஒரு மாத காலம் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 13 ரயில்களில், சுமார் 2,500 மாணவர்கள் அழைத்து செல்லப் படுகின்றனர். இதற்கான முதல் ரயில் நேற்று ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்டது. ரயிலில் செல்லக்கூடிய மாணவர்களை பா.ஜ.கவினர் ஆரத்தி எடுத்து குங்கும் வைத்து வழியனுப்பி வைத்தனர்.

அண்ணாமலை

ராமேஸ்வரத்திலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக வாரணாசி செல்லும் அந்த சிறப்பு ரயில் கும்பகோணம் வந்தது. அப்போது பா.ஜ.கவின் தமிழக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அதே ரயிலில் மாணவர்களுடன் சேர்ந்து அண்ணாமலையும் சென்னை பயணித்தார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை. அப்போது அவர், “காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதமர் நரேந்திர மோடியின் கனவு. இது முழுக்க முழுக்க அரசு நிகழ்ச்சி. எனவே இதில் பொதுமக்களும் இணைந்து காசி தமிழ்ச் சங்கம பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக மாற்ற வேண்டும். அது நமது கடமை. வரும் 19-ம் தேதிக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.

அண்ணாமலை

அப்போது தமிழக மாணவர்களை சந்தித்து பேசுகிறார். இது தமிழக மாணவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் பிரதமர் மோடி தமிழகத்தின் மீது வைத்துள்ள உணர்வை காட்டுகிறது. தமிழ்நாட்டிற்காக அவரின் இதயம் எப்போதும் துடித்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.