திருவண்ணாமலை: மின்சார சட்ட திருத்த மசோதா-2022 நிறைவேற்றப்பட்டால் தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ”2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து மகத்தான வெற்றி பெறுவதற்கான பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சார சட்ட திருத்த மசோதா மூலம் தமிழக மக்களின் உரிமை பறிக்கப்படும். மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைத்து, விருப்பப்படி கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ஆபத்து ஏற்படும்.
அரசியல் அமைப்பு சட்ட வரம்புகளை மீறி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படையான கொள்கைகளை பற்றி ஆளுநர் ரவி பேசுகிறார். தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், மாநில அரசை எதிர்த்து பகிரங்கமாக கருத்து தெரிவித்து போட்டி அரசியல் நடத்தும் நிலை உருவாகி உள்ளது. தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசியலை பாஜக நடத்துகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி கொள்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு, ஆளுநர் தலையீடு, மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழகத்தில் 4 மையங்களல் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும்.
மழை காலங்களில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஏரிகள், பாசன வடிகால்வாய்களை தூர்வாரி மழை நீர் வழிந்தோடும் வகையில் மாநில அரசு சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாறு – பாலாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.270 கோடி நிதி ஒதுக்கியும் நிறைவேற்றப்படவில்லை. நந்தன் கால்வாய் திட்டமும் முழுமை பெறாமல் உள்ளன. திருவண்ணாமலை அருகே உள்ள சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும்.
படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது அறவே இல்லை. தொகுப்பூதியம், மதிப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்குவோம், பணி நிரந்தரம் கிடையாது என மத்திய அரசும், கடந்த அதிமுக அரசும் நடைமுறைபடுத்தியபோது எதிர்த்த திமுக அரசும் செயல்படுத்த முன்வரவில்லை என்பது ஆபத்தை ஏற்படுத்தும்.
மின்சார சட்ட திருத்த மசோதா – 2022 நிறைவேற்றப்பட்டு தனியாரிடம் சென்றால், இலவச மின்சாரம் ரத்து செய்வதற்கான பணியை தொடங்குவதற்காகதான மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்துகின்றனர். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்படும். திராவிட இனம் இல்லை என ஆளுநர் கூறுகிறார். இது எந்த வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வில் திராவிடம், ஆரியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்று விரோதமாக பேசுகிறார்.
மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாற்று பணி வழங்க வேண்டும்.
தமிழக அரசு செய்து வரும் நல்ல செயல்கள் மறைந்து மின்சார கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு என்பது மக்களிடம் முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக முதல்வரை சந்தித்து, மக்கள் மீது சுமையை ஏற்றுவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் செம்பு உற்பத்தியை தொடங்காமல் மின்சாரம் உற்பத்தியை தொடங்கட்டும். உயர் சமூகத்துக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டால், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு இடையூறு ஏற்படாத வகையில், தமிழக அரசு ஆணையம் அமைத்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை கண்டறிந்து அமல்படுத்த வேண்டும்” என்றார். அப்போது அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.