ராகுல் காந்தியின் கருத்தை ஏற்க முடியாது; உத்தவ் தாக்கரே அதிரடி.!

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் பழங்குடியின தலைவர் பிர்சா முண்டாவின் நினைவாக நடந்த விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி எம்பி, “ஆங்கிலேயர்கள் அவருக்கு நிலம் வழங்கிய போதிலும், பிர்சா முண்டா அவர்களுக்கு தலைவணங்க மறுத்தார்; அவர் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார். காங்கிரஸ் கட்சியான நாங்கள் அவரை எங்கள் கொள்கைகளின் முன்னோடியாக கருதுகிறோம். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-க்கு, ஆங்கிலேயர்களுக்கு கருணை மனு எழுதி, ஓய்வூதியம் வாங்கிய சாவர்க்கர் ஜி முன்னோடியாக இருக்கிறார்’’ என்றார். இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

‘சாவர்க்கரைப் பற்றி ராகுல் காந்தியும் காங்கிரசும் திரிபுபடுத்தப்பட்ட வரலாற்றைப் பரப்புகிறார்கள். ஆனால் மகாராஷ்டிரா மக்கள் அவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்’ என்று மகாராஷ்டிரா பாஜகவின் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் குற்றம் சாட்டினார். மேலும், ‘பால் தாக்கரேவின் பெயரைக் கூற கூட உத்தவ் தாக்கரேவுக்கு உரிமை இல்லை. பாலாசாகேப் தாக்கரே, தனது வாழ்நாள் முழுவதும் சாவர்க்கரின் இந்துத்துவ சித்தாந்தத்தை முன்னெடுத்துச் சென்றார். ஆனால் அவரது கூட்டணி கட்சியினர் வீர சாவர்க்கரை இழிவுபடுத்துகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, ராகுல் காந்தியின் யாத்திரையில் உத்தவ் தாக்கரேயின் குடும்பத்தைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்’ என்று கூறினார்.

இந்தநிலையில் இன்று, மகாராஷ்டிராவின் அகோலாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, சாவர்க்கர் ஆங்கிலேயர்களுக்கு எழுதிய கருணைக் கடிதத்தின் நகலைக் காட்டினார். ‘ஐயா, உங்களின் மிகவும் கீழ்ப்படிதலுள்ள ஊழியராக நான் இருக்க வேண்டுகிறேன் என சாவர்க்கர் எழுதியுள்ளார்’ என கூறிய ராகுல் காந்தி, இந்தக் கடிதத்தில் கையெழுத்திட என்ன காரணம்?, பயம், ஆங்கிலேயர்களுக்குப் பயம். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு மற்றும் வல்லபாய் படேல் ஆகியோர் பலஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர்’ என அவரது கருத்தில் உறுதியாக இருந்தார்.

யார் ஹிந்து? ஆர்எஸ்எஸ் மோகன் பாகவத் புது விளக்கம்!

இந்தநிலையில் ராகுல் காந்தி கூறியதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என, காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘வீர சாவர்க்கரை நாங்கள் மதிக்கிறோம். மறைந்த வி.டி. சாவர்க்கருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை பாஜக அரசு ஏன் வழங்கவில்லை. எனவே சாவர்க்கரைப் பற்றி எங்களைக் கேள்வி கேட்க, பாஜகவினருக்கு உரிமை இல்லை. சுதந்திர போராட்டத்தில் பாஜகவினரின் பங்கு என்ன?. ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை தக்கவைக்கவே, தற்போது காங்கிரசுடன் கூட்டணி வைத்துள்ளோம்’ என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.