வேலூர் சி.எம்.சி மருத்துவ கல்லூரி ராகிங் விவகாரம் – மற்ற கல்லூரிகளில் என்ன நிலவரம்?!

கமல்ஹாசன் நடித்த வசூல்ராஜா என்ற திரைப்படத்தில், முதலாமாண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை அரைநிர்வாணமாக நடனமாடச் சொல்லி சீனியர்கள் சிலர் ராகிங் செய்து கொடுமைப்படுத்துவார்கள். அதேபோல ஒரு சம்பவம்தான் வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி விடுதியில் நடந்திருக்கிறது. புதிதாகச் சேர்ந்த ஜூனியர் மாணவர்களை சீனியர் மாணவர்கள் ‘ராகிங்’ செய்த வீடியோ காட்சி கடந்த வாரம் வெளியாகி, தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வேலூர் மாவட்டம் பாகாயத்தில் உள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகிறார்கள்.

ராகிங் காட்சி

அந்த மாணவர்களில் பெரும்பாலோனர் கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், முதலாமாண்டு மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கிய ஜூனியர் மாணவர்களை, மழையில் அரை நிர்வாணமாக விடுதியில் உள் வளாகத்தை சுற்றி வரச் சொல்லி, தண்ணீர் குழாயை வைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்து கொடுமை படுத்தி இருக்கிறார்கள். மேலும், அங்கு தேங்கியிருந்த மழைநீரீல் விழுச் சொல்லியும், தண்டால் எடுக்க சொல்லியும், இரு மாணவர்களை கட்டிப்பிடிக்க சொல்வது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், குற்றச்சாட்டுக்கு உள்ளான 7 மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. அதேபோல, போலீஸாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரியில் ராகிங் விவகாரம் தொடர்பாக தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவமனை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

ராகிங் கொடுமை

இந்த சம்பவத்தையொட்டி பிற மருத்துவ கல்லூரிகள் எப்படி இருக்கிறது என்று விசாரித்தோம். சென்னையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில், “பொதுவாக கல்லூரியை விட விடுதிகளில் தான் அதிகமாக ராகிங் நடக்கிறது. எந்த அளவுக்கு என்றால், ‘சீனியருக்கு வணக்கம் வை’, ‘கடைக்குபோய் ஏதாவது வாங்கிட்டு வா’, ‘ரெக்கார்டு எழுத சொல்வது’,  என சின்ன சின்ன அளவில் இருக்கிறது. இதுவும் தவறுதான் என்றாலும், ஜூனியர் மாணவர்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதால், புகார் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை. அதேநேரத்தில், மாணவர்களை எரிச்சலடையும் சம்பவம் குறித்து புகார் வந்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வருகிறது. ஆனால், வேலூர் கல்லூரியில் நடைபெற்றதுபோல, சமீபத்தில் அரசு கல்லூரிகளில் எந்த ராகிங் சம்பவமும் நடைபெறவில்லை.” என்றனர்.

அதேநேரத்தில்,`பிற தனியார் மருத்துவ கல்லூரிகளில் வெளிவராத ராகிங் சம்பவம் இன்னும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது’ என்று திகிலை கிளப்புகிறார்கள் ஆசிரியர்கள்.

இதுகுறித்து சென்னை புறநகரில் உள்ள சில மருத்துவ கல்லூரிகளின் பேராசிரியர்கள் நம்மிடம் பேசுகையில், “ராகிங் என்பது மருத்துவ கல்லூரிகளுக்கே இருக்கும் சாபம் என்று சொல்லலாம். கோடி கோடியாக பணத்தை கொட்டி தனியார் மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்கள், கடுமையாக இருக்கும் கல்லூரிகளை விரும்பவதில்லை. இதனாலேயே, மருத்துவ கல்லூரிகள், பிற உயர்கல்வி கல்லூரிகளை காட்டிலும் ஃப்ரியாக இருக்கிறது. ராகிங் குறித்து பாதிக்கப்படும் மாணவர்கள் வெளியே சொன்னால், அந்த மாணவர்கள் குழுவாக கல்லூரியில் ஒதுக்கப்படும் சூழ்நிலையும் இருக்கிறது.

ராகிங் காட்சி

இதற்கு பயந்து தான் பாதிக்கப்படும் மாணவர்கள் வெளியே சொல்வதில்லை.   தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டு நிகழ்ந்த மாணவி மரணத்தை தொடர்ந்து தான் கேலி வதையிலிருந்து பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது. அதன்பின்னர்தான், கல்லூரிகளில் ராகிங் குறைந்திருக்கிறது என்றே கூறலாம். தற்போது வேலூர் சம்பவத்தை பிரதானமாக வைத்து, மருத்துவ கல்லூரிகளில் திடீர் ஆய்வு நடத்தி விசாரித்தால்தான் உண்மை நிலை தெரியவரும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.