ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

 வவுனியா நகர மண்டபத்தில் இன்று (19) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்,
வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்புக்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்திற்காக நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
வட மாகாணத்தில் பசும்பால் கைத்தொழில் இந்திய உதவியின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடவும் நீங்கள் இச்சந்தர்ப்பத்தில் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.
 
எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைக் கட்டுப்படுத்த நாம் எதிர்பார்க்கின்றோம். இத்திட்டம் 2023 இறுதி வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திட்டத்தை செயல்படுத்தலாமா வேண்டாமா என்பதை பின்னர் பரிசீலிப்போம்.
உலகளாவிய உணவுப் பற்றாக்குறை எதிர்காலத்தில் ஏற்படலாம். அவ்வாறான சூழ்நிலையில், இலங்கையைப் பாதுகாக்க இந்த உணவுப் பாதுகாப்புத் திட்டம் முக்கியமானது என்றே கூற வேண்டும். ஆபிரிக்கா ஏற்கனவே உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது.
 
நாம் பெரும்போகத்தில் வெற்றிக் கண்டுள்ளோம். ஏனைய பயிர்ச்செய்கையிலும் இதுபோன்ற விளைச்சல் கிடைத்தால், எளிதில் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளலாம். இதைத் தவிர, இன்னும் இரண்டு விடயங்கள் உள்ளன. ஒன்று போஷாக்குக் குறைபாட்டைக் கட்டுப்படுத்தல், இரண்டாவது கிடைக்கும் விளைச்சலைப் பாதுகாத்தல் ஆகும்.
அறுவடையின் போது ஏற்படும் விரயத்தைக் குறைக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று, அவற்றை சேமிப்பதற்கும் நுகர்வோருக்கு விநியோகிக்கும் பணிகளைப் பலப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.
இதில் வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளன. கிடைக்கும் மேலதிக உணவைப் பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
 
இதேபோன்று இம்மாவட்டங்களில் நிலவும் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இக்கலந்துரையாடலில் தெரிய வந்துள்ளன. அவற்றுக்கான தீர்வுகளை விரைவில் வழங்க எதிர்பார்க்கின்றோம். சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை உருவாக்க முடியும். ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் அதிக டொலர்களை உழைக்கும் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
அதற்கான வேலைத்திட்டத்தை நான் 2023 வரவு செலவுத் திட்டத்தில் முன்வைத்துள்ளேன். அதற்கமைய வடக்கில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன. யாழ்ப்பாணத்திற்கு மட்டுமல்ல, வன்னிக்கும் இதில் பொறுப்பு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றேன்.
 
எங்களுக்கு ஒரு புதிய ஆற்றல்மிக்க பொருளாதாரம் தேவை. இதன் முக்கிய பகுதி வட மாகாணமாகும். அதன் மூலம் நிறைய அந்நியச் செலாவணியைப் பெறலாம். மத்திய கிழக்கு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு உணவு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்ட வாய்ப்பு உள்ளது. புதிய பயிர்களை வளர்ப்பதற்கான வாய்ப்புகளை நாங்கள் வழங்குகிறோம். கறுவா போன்ற பயிர்களை வளர்க்க இங்கு வாய்ப்பு உள்ளது.
 
கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தலாம். இதுபோன்ற பல வேலைத்திட்டங்கள் உள்ளன. 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் இவ்வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த விடயத்தில் வன்னிக்கும் பாரிய பொறுப்பு உண்டு என்பதை நான் கூற விரும்புகின்றேன்.
வவுனியா விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நாம் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். இவை அனைத்தும் நடைபெற உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
வவுனியா மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் பிரதேச செயலாளர்களிடம் ஜனாதிபதி கேட்டறிந்தார்.
 
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நகர அபிவிருத்தி வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதுர்தீன், சார்ள்ஸ் நிர்மலநாதன், குலசிங்கம் திலீபன், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

President’s Media Division

 வவுனியா நகர மண்டபத்தில் இன்று (19) நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.