பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் தமிழர்களால் ஜனவரி மாதம் 14ஆம் தேதி கோலகலமாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களும் பயன்பெறும் வகையில், பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்துடன், ரூ.1000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்புடன் சேர்த்து ரூ.2500 வழங்கப்பட்டது.
ஆனால், கடந்த ஆண்டு, தைப் பொங்கலுக்கு ரொக்கப் பணம் வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கரும்பு, நெய் உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மொத்தம் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.
ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது பொதுமக்களை ஏமாற்றமடைய செய்தது. எதிர்க்கட்சிகள் இதனை கடுமையாக விமர்சித்தன. பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த மளிகைப் பொருட்கள் தரமற்றதாக இருந்ததாகவும் அவர்கள் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்கம் வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், பொங்கல் பரிசு வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, காந்தி மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் 1983 முதல் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்திற்கு தேவையான வேட்டி, சேலைகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்தவகையில், நடப்பாண்டு இலவச வேட்டி சேலை உற்பதிக்கான ஆர்டர்கள் நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்படாதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இதையடுத்து, இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும் என்றும் அதற்காக 2022-2023-ம் ஆண்டு 487 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் காந்தி விளக்கம் அளித்தார். ஆனாலும், இதுவரை இலவச வேட்டி சேலைகளுக்கான ஆர்டர்கள் வழங்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பொங்கலுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது குறித்து தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.