துருக்கியில் இருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகள் கட்டாய வெளியேற்றம்: சர்வதேச சட்டங்கள் மீறப்படுவதாக புகார்!

காபுல்,

துருக்கி அரசு தன் நாட்டின் எல்லைக்குள் இருந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் அகதிகளை ஈரானுக்கு தொடர்ந்து அனுப்புகிறது.

மேலும் ஆப்கானிஸ்தானுக்கு நேரடியாக விமானங்கள் மூலம் திருப்பி அனுப்பி வருகிறது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.துருக்கியில் உள்ள ஆப்கானிஸ்தான் அகதிகள் சர்வதேச பாதுகாப்பிற்காக பதிவு செய்வதிலிருந்து தடுக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது.

நடப்பாண்டில் முதல் எட்டு மாதங்களில் இதுவரை 44,768 ஆப்கானிஸ்தான் அகதிகளை துருக்கி விமானம் மூலம் அனுப்பியது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததும் இந்த நடவடிக்கை வேகமெடுத்துள்ளது என்று மனித உரிமைகள் அமைப்பின் 73 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

துருக்கியில் இருந்து சமீபத்தில் நாடு கடத்தப்பட்ட ஆப்கானியர்கள் சிலர், துருக்கிய போலீசாரால் தாங்கள் தவறாக நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர். போலீசார் எங்களை எந்த அளவுக்கு முடியுமோ அப்படி அடித்தார்கள், கொடூரமாக தாக்கினார்கள் என்று ஆப்கானியர்கள் கூறினர். நாங்கள் பிழைப்புக்காக துருக்கி சென்றோம், ஆனால் திரும்பி நாடு கடத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை என்றனர்.

ஆப்கானிஸ்தானியர்களை துருக்கி வெளியேற்றியது நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது. துருக்கி, ஈரான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தான் குடியேறியவர்களை கட்டாயமாக வெளியேற்றுவது சர்வதேச அகதிகள் சட்டங்கள் மற்றும் மரபுகளை தெளிவாக மீறுவதாக சர்வதேச உறவு நிபுணர் நசீர் அஹமட் தரேக்கி கூறினார். இது இந்த ஆப்கானியர்களின் உயிரை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று தெரிவித்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.