பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு அரசு சார்பில் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது இந்தத் திட்டமானது 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்தவகையில் 2023ஆம் ஆண்டுக்கான வேட்டி, சேலை உற்பத்திக்காக முதல் தவணையாக 243.96 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் 1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில்,பொங்கல் பண்டிகைக்கான வேட்டி, சேலை திட்டம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்டம் வாரியாக வேட்டி, சேலைகளை அனுப்புவது, திட்டத்தை முறையாக செயல்படுத்துவது குறித்தும், விநியோகிக்கும் நடைமுறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஆலோசனை கூட்டத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், கைத்தறித் துறை செயலாளர், அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
அரசின் இலவச வேட்டி சேலை 2023 ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், பல நிறங்களிலும், 15 டிசைன்களிலும் சேலைகள், இதேபோல 5 டிசைன்களில் ஆண்களுக்கான வேட்டிகள் வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பு ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்கிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டிகள் மற்றும் சேலைகளை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். pic.twitter.com/SM5sttiiEr
— CMOTamilNadu (@CMOTamilnadu) November 19, 2022
முன்னதாக, பொங்கல் பண்டிகை வேட்டி, சேலை திட்டத்திற்கு பருத்தி நூல் வாங்க தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி டெண்டர் அறிவித்திருந்தது. அதில், 1,683 மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்கும் இந்த புதிய டெண்டருக்கு செப்டம்பர் 9ஆம் தேதி கடைசி நாள் என்றும், இதன் மூலம், சுமார் 1. 80 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோல் வழங்கப்படவிருக்கும் வேட்டி, சேலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.