சென்னை கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள இரண்டு மருத்துவர்களை கைது செய்யும் முயற்சியில் மூன்று தடைப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் தமிழக முழுவதும் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநிலத் தலைவர் கே.செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துருவிஷ்டவசமான மரணம் தொடர்பாக சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழக முதல்வர் இறந்த பிரியாவின் குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலுக்கும் உதவி தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
அதே சமயம் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலில் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பிற்கு பொதுவாக அந்த துறை மூத்த நிபுணர்களின் கருத்தை காவல்துறை பெற வேண்டும். அவ்வாறு பெறப்படும் கருத்தில் அந்த மரணத்தில் மருத்துவ சிகிச்சையின் செய்யும்போது கவனக்குறைவு இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 ஏ பிரிவில் வழக்கு தொடர வேண்டும். அவ்வாறு 304 ஏ பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் டாக்டர்களை கைது செய்வது தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாக சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழக காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களை சேர்ந்து தனி படை அமைத்து தேடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றமும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் மருத்துவர்களை கொலை குற்றவாளி போல் முன் ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடைய கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைக்கிறது. இந்த நிகழ்வில் சிவில் கவனக்குறைவாக ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
மருத்துவர்களின் பெயர்களையோ புகைப்படங்களையோ ஊடகத்தில் கிரிமினல் குற்றவாளிகளை போல் வெளியிட வேண்டாம் என சங்கம் வேண்டுகோள் வைக்கிறது. மேலும் போலீஸ் நடவடிக்கை மருத்துவர், செவிலியர், சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரான அதிகப்படியான நடவடிக்கை என சங்கம் கருதுகிறது.
எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304 எ பிரிவு மாற்ற வேண்டும். அதனை மீறி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அதேபோன்று இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவர் சங்கம் நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கத்துகளையும் சேர்த்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.