இது எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த வெற்றி – ஆர்.பி. உதயகுமார் பெருமிதம்

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்த ஆண்டு பயிர் காப்பீட்டுக்கான கடைசி நாள் வருகிற 15ஆம் தேதி என அரசு அறிவித்திருந்தது. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை இம்மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்றும், வேளாண் அதிகாரிகளுடன் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளும் விவசாயிகளும் நேரிலே சென்று அவர்களது நிலங்களை காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொண்டுவர காப்பீட்டு நிறுவனங்களுடன் பேசி திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும் இந்த ஆண்டு காப்பீட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகள் கட்ட வேண்டிய காப்பீட்டு தொகையை மாநில அரசே அந்த காப்பீட்டு தொகையான பிரிமியத்தை செலுத்த வேண்டும் என்றும், இந்த அரசை வலியுறுத்தி எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதன் அடிப்படையிலேயே, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், கரூர், தர்மபுரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், சேலம், திருப்பூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15ஆம் தேதிக்குள் சம்பா நெல் பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் நவம்பர் 21க்குள் பயிர் காப்பீடு திட்டத்தில் சேரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது எடப்பாடியார் அறிக்கைக்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும்

மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான ஏக்கர் நெல் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன இதை எதிர்கட்சி தலைவர்ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும்.

கடந்தாண்டு பெய்த மழையால் பாதிக்கப்பட்ட வேளாண் நிலங்களை, வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை அனுப்பி கணக்கெடுப்பு நடத்த தவறியதால் கணக்கெடுப்பில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பல பகுதிகள் கணக்கெடுப்பில் விடுபட்டுவிட்டன என்ற குற்றச்சாட்டு விவசாயிகளிடமிருந்து பரவலாக தெரிவிக்கப்பட்டதையும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் சுட்டிக் காட்டினார்” என்றார்.

முன்னதாக சம்பா மற்று தாளடி பருவத்தில் நெல் சாகுபடியை பயிர் காப்பீடு செய்வதற்கான அவகாசத்தை தமிழ்நாடு அரசு நவம்பர் 21ஆம் தேதிவரை நீட்டித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.